
இக்கட்டான நிலையில் ராஜபக்ஷ குடும்பம்; படுதோல்வியடையும் நிலையில் கட்சி
ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க தமது குடும்பத்திற்குள் எவரும் இல்லை. வேட்பாளராக வெளியில் இருந்து ஒருவரை நியமிக்க விருப்பமும் இல்லை என்ற இக்கட்டான நிலைமைக்குள் ராஜபக்ஷ குடும்பம் தள்ளப்பட்டுள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
இதேவேளை தற்போதைய நெருக்கடி நிலைமையில் முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றால் மொட்டுக் கட்சி படுதோல்விக்கு தள்ளப்பட்டு விடும் என்றும், இதனால் இருக்கும் ஆசனங்களில் சிலவற்றையாவது தக்க வைத்துக்கொள்ளவே அவர்கள் பொதுத் தேர்தலை முதலில் நடத்த முயற்சிக்கின்றனர் என்றும் ஜே.வி.பி குறிப்பிட்டுள்ளது.
ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலொன்றின் போது ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனை கூறியுள்ளார்.
அதன்போது விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பொதுஜன பெரமுனவிரிடம் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் இல்லாத காரணத்தினாலேயே அவர்கள் அவசரமாக பொதுத் தேர்தலை கோருகின்றனர். சட்டத்தின்படி மகிந்த ராஜபக்ஷவுக்கு போட்டியிடவே முடியாது. கோதாபய ராஜபக்ஷவும் போட்டியிடப் போவதில்லை. பஸில் போட்டியிட்டால் மக்கள் வாக்களிக்கப் போவதில்லை. நாமல் ராஜபக்ஷ மிகவும் இளைமையானவர். இதனால் போட்டியிடுவதற்கு ராஜபக்ஷக்களிடையே எவரும் இல்லை. ஆனாலும் ராஜபக்ஷ குடும்பத்தைவிட்டு வெளியில் கொடுப்பதற்கும் விருப்பமில்லை.
அப்படி அந்தக் கட்சிக்குள் வேறு ஒருவருக்கு வழங்க விரும்பியிருந்தால் மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணிலிடம் ஜனாதிபதி பதவியை கொடுத்திருக்க மாட்டார்கள். தமக்கு முடியாது என்பதனையே இவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்களிடம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேட்பாளர் இல்லை. எவர் வேட்பாளராக வந்தாலும் மக்கள் அவரை தோற்கடிப்பர். ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தால் பொதுத் தேர்தலில் மொட்டுக்கட்சி படுதோல்வியடையும். கட்சி கழுவிக்கொண்டு போய்விடும். இதனால் அவர்களுக்கு உள்ள ஒரே மாற்றுவழியாக இருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே ஒத்துழைப்பு வழங்க வேண்டிய நிலைமையே உள்ளது. ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்தாலும் மொட்டுக் கட்சி இல்லாது போய்விடும். இவ்வாறு ஜனாதிபதித் தேர்தலில் இவர்கள் நன்றாக சிக்கிக்கொள்வர்.
இதனால் இருக்கும் ஆசனங்களில் சிலவற்றையாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலேயே முதலில் பொதுத் தேர்தலை நடத்த முயற்சிக்கின்றனர் என்றார்.