
சஜித்தின் புதிய கூட்டணி ஏப்ரல் 5 ஆம் திகதி அறிவிப்பு
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை ஏற்றுக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள புதிய கூட்டணி தொடர்பான அறிவிப்பு ஏப்ரல் 5 ஆம் திகதி வெளியிடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி புதிய கூட்டணியான, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு அறிவிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் நடவடிக்கைகளின் தலைவர் முன்னாள் அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், அரசாங்கத்தில் பதவி வகிக்கும் அமைச்சர்கள் குழுவும் அதற்காக இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர்கள் உட்பட மேலும் பலர் தமது கட்சியில் இணைய உள்ளதாகவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அரசியல் இலாபங்களுக்காக செயற்படும் கட்சிகளுடன் இணைய தாம் தயாரில்லை எனவும் கொள்கையுடையவர்களே கட்சியில் இணைவார்கள் எனவும் தெரிவித்தார்.
மக்களின் வாக்குகளை தனது கட்சிக்கு மாற்றிக் கொள்வேன் என நம்புவதாகவும் எதிர்வரும் மே தினத்தில் வரலாற்றில் மிகப்பெரிய மக்கள் படையுடன்; ஐக்கிய மக்கள் சக்தி இணையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.