
வடக்கில் விரைவில் 50 ஆயிரம் வீடுகள்
வடக்கு மாகாணத்தில் வீடற்ற மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் வகையில் சுமார் 50,000 வீடுகளை அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
சூரிய கலன்களின் மூலம் மின் உற்பத்தியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் குறித்த வீடுகள் அமைக்கப்படவுள்ளன.
இதனடிப்படையில் பயனாளர்களுக்கு சுமார் 45 இலட்சம் ரூபா பெறுமதியான 750 சதுர அடி விஸ்தீரணமுள்ள கல் வீடுகள் பயனாளர்களுக்கு கிடைக்கவுள்ளது.
இதேவேளை கடந்த காலங்களில் திட்டங்களூடாக கட்டப்பட்டு நிறைவுறாது அரைகுறை வீடுகளாக இருக்கும் வீடுகளையும் இதில் உள்ளடக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை கட்டுமாணத்துறையில் கடந்தகாலத்தில் நாம் கண்டுகொண்ட குறைபாடுகளால் எதிர்பார்த்த இலக்கை அடையமுடியாது போனதாக சுட்டிக்காடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இனிவரும் காலங்களில் அவ்வாறான குறைபாடுகள் களையப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேலும் ஒவ்வொரு திட்டங்கள் முன்னெடுக்கப்படும்போது மக்கள் பங்களிப்பும் அவசியம் இருக்க வேண்டும். இதில் திட்டங்களை அமுலாக்கும் நிறுவனங்கள் கூடிய அக்கறை எடுத்து திட்டங்களை விரைவாக நிறைவுறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சரால் பணிக்கப்பட்டது.