
நிகழ்நிலை காப்புச் சட்டமும் ஆபத்துகளும்
முன்மொழியப்பட்டுள்ள நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமூலம் முன்வரைவு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப் பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் இரவோடு இரவாக சட்டமூலங்களை உருவாக்கி நாடாளுமன்றப் பிரதிநிதிகளின் ஒத்துழைப்போடு சட்டமாக்குவதும், அதன் பின்னர் நாட்டில் வாழும் மக்களின் உரிமைகளையும், இந்நாட்டினுடைய ஜனநாயக விழுமியங்களையும் அடியோடு வேரறுக்கின்றதுமான செயல்பாடுகள் காலங்காலமாக அரங்கேற்றப்பட்டுக் கொண்டே வருகின்றன.
இதற்கு எடுத்துக்காட்டாக தற்போது முன்மொழியப்பட்டுள்ள நிகழ்நிலைப் பாதுகாப்பு தடைச் சட்டத்தைக் கூறலாம். இவ்வாறான சட்டம் இந்நாட்டில் வாழும் சிவில் சமூகங்களைக் குறிவைப்பதோடு அவர்களின் அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள் ஆகியவற்றை இல்லாது செய்வதற்குப் பயன்படுத்தப் படுகின்றமை அறிந்த யதார்த்தமாகும்.
அந்த வகையில் தற்போது வரைபு செய்யப்பட்டுள்ள நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமானது நடைமுறைக்கு வருமானால் எதிர்காலத்தில் குடிமக்கள் சுதந்திரமாகத் தகவல்களைப் பெறுவதற்கும் அணுகுவதற்கும் கையாள்வதற்கும் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கும் பாரியதொரு அச்சுறுத்தலாக இருக்கும்.
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் என்றால் என்ன?
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் 2023 செப்டெம்பர் 18 ஆம் திகதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு 2023 ஒக்டோபர் 3 ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இச்சட்ட மூலமானது குறிப்பிட்ட நோக்கங்களுடன் ‘நிகழ்நிலை பாதுகாப்பு ஆணைக்குழு ’ ஒன்றை நிறுவ வேண்டும் என்று கூறுகிறது. இந்த நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தின்படி ஒரு நபர் நிகழ்நிலையில் பதிவிடுவதை அல்லது பகிர்வதை குற்றமாக்க முடிவதுடன், இது 20 ஆண்டுகள் வரை தண்டனைத் தடைகளை விதிக்கும்.
இந்தச் சட்டமூலத்தால் குடிமக்கள் நேரடியாக எதிர்கொள்ளவுள்ள சவால்கள்:
நியாயமற்ற, தன்னிச்சையான அல்லது தற்காலிகமான முறையில் செயல்படுத்தக்கூடிய அதிகப்படியான மற்றும் தெளிவற்ற குற்றங்களை இந்த சட்டமூலம் உருவாக்குகிறது.
ஒப்புதலுக்கு உட்பட்டு தன்னிச்சையான அடிப்படையில் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை நீக்கக்கூடிய ஜனாதிபதியால் நேரடியாக நியமிக்கப்படும் ஆணைக்குழுவுக்கு தெளிவற்ற வரையறுக்கப்பட்ட, பரந்த அதிகாரங்களை இந்த சட்டமூலம் வழங்குகிறது.
இந்த சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது மற்றும் சட்டமாக்க முடியாது என்ற அடிப்படையில் சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை சவாலுக்கு உட்படுத்தக் கூடியது என்று மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவிக்கிறது.
இந்த சட்டமூலம் அமைச்சரால் நிபுணர்களாக இணைத்துக் கொள்ளப்பட்ட தனிப்பட்ட பிரஜைகளுக்கு பரந்த மற்றும் அதிகப்படியான தேடல் மற்றும் பறிமுதல் அதிகாரங்களை வழங்குகிறது.
அவை தன்னிச்சையானவை மற்றும் கணிக்க முடியாதவை. அரசியலமைப்பின் 14(1) (ய)இ (டி)இ (உ)இ (ந)இ (க)இ மற்றும் (ப) மற்றும் உறுப்புரை 10 ஆகியவற்றால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமை போன்ற அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்துவதை இந்த சட்டமூலம் சட்டவிரோதமாக கட்டுப்படுத்தி முடக்குகிறது.
‘நிகழ்நிலை பாதுகாப்பு ஆணைக்குழு’ என்றால் என்ன?
நிகழ்நிலை பாதுகாப்பு ஆணைக் குழுவானது அரசியலமைப்பு பேரவையின் அனுமதிக்கு உட்பட்டு இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஐந்து உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்.
இவ் உறுப்பினர்கள் தகவல், தொழில்நுட்பம், சட்டம், ஆளுகை, சமூக சேவைகள், பத்திரிகைத்துறை, அறிவியல், தொழில்நுட்பம் அல்லது முகாமைத்துவம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறையில் தகுதி மற்றும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆணைக்குழுவானது கீழ்கண்ட விரிவான அதிகாரங்களைக் கொண்டிருக்கும்.
தேசிய பாதுகாப்பு, பொது சுதந்திரம் அல்லது பொது ஒழுங்கிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அல்லது தீய எண்ணம் மற்றும் விரோத உணர்வுகளை ஊக்குவிக்கும் தவறான அறிக்கைகளை தடை செய்கிறது.
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தில் பட்டியலிடப்பட்டுள்ள முக்கிய குற்றங்கள் யாவை?
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலமானது பலவிதமான குற்றங்களுக்கு வழிவகுக்கிறது. இவற்றுக்கு சிறைத்தண்டனை மற்றும், அல்லது அபராதம் உள்ளிட்ட பல்வேறு தண்டனைகள் உள்ளன.
தேசிய பாதுகாப்பு, பொது சுதந்திரம் அல்லது பொது ஒழுங்கிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அல்லது ‘தீய எண்ணம் மற்றும் விரோத உணர்வுகளை ஊக்குவிக்கும்’ தவறான அறிக்கைகளை தடை செய்கிறது. கருத்துச் சுதந்திரத்தை மீறும் வகையில், எதிர்மறையான கருத்துகளை வெளியிடுமாறு தனிநபர்கள், சேவை வழங்குநர்கள் அல்லது இணைய இடைத் தரகர்களுக்கு ஆணைக்குழு உத்தரவுகளை பிறப்பிக்கலாம்.
நீதிமன்ற உத்தரவு இல்லாமல் உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான அறிவிப்புகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குவதற்கான ஆணைக்குழுவின் அதிகாரம் அரசியலமைப்பு உரிமைகளை மீறக்கூடும். இது சேவை வழங்குநர்கள் மற்றும் இறுதி பயனர்களை பாதிக்கும்.
சேவை வழங்குனர்களுக்கான பரிந்துரைகள், ஆணைக்குழுவின் வலைத்தள பதிவு அதிகாரத்துடன் இணைந்து, இணக்கத்தின் மீது தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடும், இது சுதந்திரமாக நடவடிக்கைகளை நடத்துவதற்கான உரிமையை மீறக்கூடும்.
நீதிமன்ற உத்தரவு இல்லாமல் அணுகலை முடக்குவதற்கான பரிந்துரைகள் அரசியலமைப்பு உரிமைகளை மீறக்கூடும், ஏனெனில் இது சரியான சட்ட ஆய்வு இல்லாமல் தகவல் பரவலைக் கண்காணிக்க அனுமதிக்கிறது.
வழிகாட்டுதல்கள் இல்லாமல் விதிகளை உருவாக்கும் அதிகாரம் (11(த) 12(1) தெளிவான வழிகாட்டுதல்கள் மற்றும் குறிப்பிட்ட அளவுகோல்கள் இல்லாமல் ஆணைக்குழுவின் விதிகளை உருவாக்கும் அதிகாரம் சமத்துவத்திற்கான உரிமையை மீறுகிறது, இது சட்டத்தின் கீழ் வெளிப்படைத்தன்மை மற்றும் சமமான பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்புகிறது.
ஐக்கிய இராச்சியம் போன்ற நியாயாதிக்கங்களில் காணப்படும் இணையம் தொடர்பான சட்டங்களுடன் ஒப்பிடுகையில், இலங்கை நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் தெளிவான வரையறைகள், கருத்துச் சுதந்திரத்திற்கான வலுவான பாதுகாப்புக்கள் மற்றும் விரிவான சிறுவர் பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்குவதில் பின்தங்கியுள்ளது. ஜனாதிபதியின் அதிகாரங்கள் குவிந்திருப்பதாலும் நிகழ்நிலை பாதுகாப்பு ஆணைக்குழுவுக்கு சுயாதீனமின்மை காரணமாகவும் கவலைகள் எழுகின்றன.
இலங்கை நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தில் தெளிவு, சுதந்திரம் மற்றும் வினைத்திறன் மிக்க ஒழுங்குமுறை என்பன கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இந்த வேறுபாடுகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான ஊடகத்துறை அடக்குமுறைக்கு உள்ளாகுமானால், அது ஒட்டுமொத்தமாக நாட்டின் அரசியல், ஆட்சி, பொருளாதாரம், வாழ்வியல் ஒழுங்குமுறை அனைத்தையும் பாதிப்பதோடு நாட்டை அதல பாதாளத்திற்கு இட்டுச் செல்லும் என்பதே யதார்த்தம்.
நாட்டில் ஒரு ‘கொடுங்கோன்மை’ ஆட்சி நடைபெற்றால். அதனை மாற்றுவதற்கான எந்தவொரு சமூக எழுச்சியையும் மேற்கொள்வதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. குறிப்பாக இளையோர் சமுதாயம் அவர்களது ஆக்கபூர்வமான எந்தவொரு சிந்தனையையும் வெளிப்படுத்த முடியாத நிலைமையில் அடக்கி ஒடுக்கப்பட்டவர்களாக மூளைச் சலவை செய்யப்பட்டவர்களாக இருப்பர்.
ஒட்டுமொத்தத்தில் கூறப்போனால் ஒருவர் சிந்திக்கவோ செயற்படவோ முடியாதவாறு நவீனத்துவ அடிமையாக இருக்கும் நிலை உருவாகும்.
-வ.சக்திவேல்.