யாழில் இந்தியத் தூதரத்தை முற்றுகையிடுவதற்கு முயற்சி; பொலிஸார் மீனவர்கள் முறுகலால் பதற்றம்

யாழில் இந்தியத் தூதரத்தை முற்றுகையிடுவதற்கு முயற்சி; பொலிஸார் மீனவர்கள் முறுகலால் பதற்றம்

இலங்கையின் மீன் வளங்கள் தொடர்ச்சியாக இந்திய இழுவை படகுகளால் அழிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் மாவட்ட மீனவர்கள் கடந்த நான்கு நாட்களாக முன்னெடுத்த உண்ணாவிரத போராட்டத்துக்கு உரிய தீர்வு கிடைக்காத நிலையில் மீனவர் அமைப்புகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரத்தை வெள்ளிக்கிழமை காலை முற்றுகையிட முற்பட்டபோது பொலிசாருக்கும் மீனவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

பொலிஸாரின் கட்டுப்பாட்டையும் மீறி மீனவர்கள் போராட்டத்தை முன்னெடுத்ததால், மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் கை விலங்கினை காட்டி பொலிஸார் மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இலங்கையின் மீன் வளங்கள் தொடர்ச்சியாக இந்திய இழுவைப் படகுகளால் அழிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த செவ்வாய்க்கிழமை மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தனர். எனினும் நான்கு நாட்கள் கடந்த நிலையில் போராட்டத்துக்கு உரிய தீர்வு வழங்கப்படாமையாலும் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோரின் நிலை மிக மோசமடைந்திருந்ததாலும் பொறுமையிழந்த மீனவர்கள், வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரத்துக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் தூதரகத்துக்குள் நுழையவும் முயற்சித்தனர்.

இந்நிலையில் பொலிசார் மீனவர்களை சுமூகமான நிலைக்குள் கொண்டு வர முயன்றும் மீனவர்கள் பொலிசாரின் கட்டுப்பாட்டை மீறி போராட்டத்தை முன்னெடுத்தமையால் அச்சுறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் பொலிசாருக்கும் மீனவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்படவே அங்கு நீண்ட நேரம் பதற்ற நிலை நிலவியது.

தமது கடல் வளங்கள் அளிக்கப்பட்டு வருவதாகவும் இதனை தடுத்து நிறுத்துமாறு கோரி வடமாகாண மீனவர்களால் தொடர்ச்சியாக இவ்வாறான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )