
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியவர்களைத் தெரியும்; நீதிமன்றம் கோரினால் வெளியிடத் தயார்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது தமக்கு தெரியும் எனவும் நீதிமன்றம் கோரினால் அதனை வெளிப்படுத்த தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களை சந்தித்த போதே இவ்வாறு குறிப்பிட்ட அவர், அதன் இரகசியத் தன்மையை பேணுவது நீதிபதிகளின் கடமையெனவும் குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எனது ஆட்சிக் காலத்தில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் மீது இன்று வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றது. இந்த வழக்குகள் அனைத்தும் மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவினால் விசாரணை செய்யப்படுகின்றன. எனினும் தாக்குதலை உண்மையில் நடத்தியவர்கள் யார் என்பது தொடர்பில் இதுவரை யாரும் கூறவில்லை.
ஆனால் உண்மையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை யார் செய்தார்கள் என்பது எனக்குத் தெரியும். நீதிமன்றம் உத்தரவிட்டால், அதனை வெளிப்படுத்த தயாராக இருப்பதாகவும் அதன் இரகசியத் தன்மையை பேணுவது நீதிபதிகளின் பொறுப்பு எனவும் தெரிவித்தார்.
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 45 வெளிநாட்டவர் உள்ளிட்ட 269 பேர் கொள்ளப்பட்டதுடன் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 100 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு மைத்திரிபால சிறிசேனவுக்கு கடந்த வருடம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு தலா 75 மில்லியன் ரூபா செலுத்த வேண்டும் எனவும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ 50 மில்லியன் ரூபா செலுத்த வேண்டும் எனவும், தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சிசிர மெண்டிஸ் 10 மில்லியன் ரூபாவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடாக செலுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டிருந்தது.
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக, போதியளவு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அதனைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளாமை மூலம், அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக குற்றம் சுமத்தி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பிலேயே நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டிருந்தது.