
விவசாயத்திலும் அரசு இனவாதம்; சாணக்கியன் எம்.பி. கடும் சாடல்
விவசாயிகள் விடயத்தில்கூட அரசாங்கம் இனவாத ரீதியிலேயே செயற்படுகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு, கிழக்கை பொறுத்தவரையில் விவாசாயத்தை நம்பியே அதிகளவான மக்கள் இருக்கின்றனர். இவர்களின் பிரச்சினைகள் முக்கியமான பிரச்சினையாக உள்ளது. விவசாயகம் மற்றும் கால்நடை என்பது ஒன்றாக பயணிக்கும் விடயமாகும். கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரை தொடர்பான பிரச்சினை முக்கியமானதாக உள்ளது. அங்கு மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். அந்த விவசாய நிலத்தில் பெரும்பான்மை சமூகத்தை குடியேற்ற நடவடிக்கை எடுத்தமையினால் அங்கு கால்நடைகளை வைத்திருப்பவர்கள் அவற்றை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மயிலத்தமடு, வெருகல், வட்டமடு போன்ற பிரதேசங்களில் இவ்வாறான பிரச்சினைகள் உள்ளது. கால்நடைகளை தேவையான நேரத்தில் மேய்ச்சல் தரைக்கு கொண்டு செல்ல முடியாவிட்டால் அவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது. விவசாய அமைச்சர் இதற்கு தீர்வு காண ஏதேனும் வழியிருக்கின்றதா என்று ஆராய வேண்டும்.
விவசாய போகம் முதலில் கிழக்கிலேயே ஆரம்பமாகும். விவசாய ஆரம்ப திகதிகளை கிழக்கை மையமாக கொண்டு ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். எமது விவசாயிகள் வட்டிக்கு பணம் பெற்றே உரம் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். பொலனறுவை, அனுராதபுரம் போன்ற மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டே நிதிகள் ஒதுக்கப்படுகின்றன. இதனால் கிழக்கு விவசாயிகள் கடனாளிகளாகின்றனர். உர மானியத்தை நேரத்திற்கு கொடுக்க விவசாய அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கஸ்டப்பட்டு விவசாயம் செய்து அறுவடை செய்யும் காலத்தில் யானைகளின் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. யானை வேலிகளை ஒரு இலட்சம் கிலோ மீற்றருக்கு அமைப்போம் என்று கூறியவர்கள் 10 கிலோ மீற்றர் தூரத்திற்குகூட அதனை அமைக்கவில்லை. இதனால் விவசாயிகளுக்கு எஞ்சுவது கடன் மட்டுமாகவே இருக்கின்றது.
இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும் விவசாயத்துறை தொடர்பான மதிப்பீட்டு நடவடிக்கைகளின் போதும் எமது மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது. எமது விவசாயிகள் தொடர்ச்சியாக கடனாளிகளாகவே இருக்கின்றனர் என்றார்.