
வடக்கு மீள்வதற்கு உறுதி எடுப்போம்; யாழில் ஜனாதிபதி ரணில்
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணம் வீழ்ந்த இடத்தில் இருந்து மீள்வதற்கு ஜேர்மன் மற்றும் ஜப்பானைப் போன்று வலுவாக திடசங்கற்பம் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை வலி வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் 33வருடங்களாக காணப்பட்ட பொதுமக்களுடைய காணிகளை மீளவும் பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;
அடுத்த ஜந்து வருட திட்டத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தல், கடற்தொழில் துறையை மேம்படுத்தல் மற்றும் மின் உற்பத்தி என பொருளாதாரத்தை கட்டியெழுப்பக்கூடிய பல திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளோம்.வடக்கு மாகாணத்திலும் வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.
அந்தவகையில் காங்கேசன்துறை துறைமுகத்தை இந்தியாவின் உதவியுடன் அபிவிருத்தி செய்து வருகிறோம்.வடக்கில் அனைவரும் ஒன்றாகச் செயற்பட்டால் மிகப்பெரிய அபிவிருத்தியைக் காண முடியும்.எல்லோரும் ஒன்றாக இணைந்து முன்னோக்கிப் பயணிக்க வேண்டும்.
யுத்தத்தால் அனைத்தையும் இழந்து விட்டோம் என அப்படியே இருக்க முடியாது.அதில் இருந்து மீள வேண்டும். அதற்கு ஜேர்மன்,ஜப்பானைப் போன்று வலுவான திடசங்கற்பம் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.