
மாவீரர் நினைவேந்தல் விசாரணைக்கு உத்தரவு
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உயிர்நீத்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களின் நினைவாக இதுவரையில் நடத்தப்பட்ட மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
மாவீரர் தின நிகழ்வுகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறும் அவற்றை தடை செய்யுமாறும் கோரி முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி ஆனந்த ஜயமானவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு கடந்த வியாழக்கிழமைக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகியிருந்த சிரேஷ்ட அரசாங்க சட்டத்தரணி சமிந்த விக்கிரம இந்த அறிவித்தலை வழங்கியிருந்தார்.
எஸ்.யூ.பி.கரலியத்த மற்றும் மாயாதுன்னே கோரையா ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு அழைக்கப்பட்டது. இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி உண்மைகளை முன்வைத்து, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த நவம்பரில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என நீதிமன்றில் உறுதியளித்தார்.
இதன்படி, குறித்த மனு கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபர் இவ்வாறான உறுதிமொழியை வழங்குவதால், இந்த மனுவை தொடர வேண்டிய அவசியமில்லை என மனுதாரரின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர். அதன்படி மனுவை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் என மனுதாரரின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அப்போது, நீதிமன்றத்தில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி சமிந்த விக்ரம, இதுவரையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற மாவீரர் நிகழ்வுகள் தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முழுமையான அறிக்கையை நீதிமன்றில் முன்வைக்க உள்ளதாக அதன் பின்னர் இந்த மனுவை வாபஸ் பெறுவது தொடர்பான கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அதன்படி, உரிய விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு, மனுவை வாபஸ் பெறுவதற்கான கோரிக்கையை பரிசீலிக்கும் என்றும் உத்தரவிடப்பட்டது.