ரணில் – பசில் இன்று அவசர சந்திப்பு: பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்த ஆலோசனை

ரணில் – பசில் இன்று அவசர சந்திப்பு: பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்த ஆலோசனை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவிற்கும் இடையிலான முக்கியத்தும் வாய்ந்த சந்திப்பொன்று இன்று வியாழக்கிழமை ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்கள் உள்ளிட்ட அரசியல் விவகாரங்கள் தொடர்பிலான விடயங்கள் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவது அரசியல் ரீதியாக சாதகமானது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர் கருதுவதுடன், பசில் ராஜபக்சவும் இதனை வலியுறுத்தி வருகிறார்.

பசில் ராஜபக்ச, அமெரிக்காவில் தங்கியிருந்த காலப்பகுதியில் பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான திட்டங்களையும் தேர்தல் வியூகங்களையும் வகுத்துள்ளார்.

இதற்காக சில அரசியல் நிபுணர்களுடனும் அவர் ஆலோசனைகளையும் நடத்தியுள்ளார். தாயகம் திரும்பியதும் ஜனாதிபதியுடன் இதுகுறித்த தமது நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தியிருந்தார்.

முதல் சந்திப்பில் பசில் ராஜபக்ச கோபமாக நடந்துக்கொண்டதாக செய்திகள் வெளியாகியிருந்த பின்புலத்தில் இரண்டாவது சந்திப்பின் மீது அரசியல் கட்சிகளின் அவதானம் திரும்பியுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )