சுயகௌரவம் இருக்குமாக இருந்தால் சபாநாயகர் பதவி விலக வேண்டும்

சுயகௌரவம் இருக்குமாக இருந்தால் சபாநாயகர் பதவி விலக வேண்டும்

சுயகௌரவம் இருக்குமாக இருந்தால் தனது தவறுகளை ஏற்றுக்கொண்டு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன பதவி விலக வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் முதலாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

நிகழ்நிலைக் காப்புச் சட்டம் தொடர்பில் நான் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளேன். எவ்வாறாயினும் உயர்நீதிமன்றம் அது தொடர்பான நடவடிக்கைகளை தொடர முடியாதவாறு அதனை நிராகரித்துள்ளது. உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீளாய்வு செய்ய வேண்டும் என்று கேட்கின்றேன்.

சட்டமூலம் முறையாக நிறைவேற்றப்பட வேண்டும். முறையாக அன்றி அதனை நிறைவேற்ற சபாநாயகருக்கு முடியாது. விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்று நீதிமன்றம் அறிவித்திருந்தால் அதன்படியே செய்ய முடியும். சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பில் குறிப்பிடப்பட்டிருந்தால் அதன்படி குறித்த சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டும். அதேபோன்று நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களையும் உள்ளடக்க வேண்டும். ஆனால் இவை எதுவும் இன்றி சாதாரண பெரும்பான்மையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாங்கள் திருத்தங்களை முன்வைத்தோம். அதனையும் செய்யவில்லை. 6 சரத்துக்கள் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளையும் மீறி நிறைவேற்றப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை புரிந்துகொள்ள முடியாது ஆளும் கட்சியில் ஜனாதிபதி சட்டத்தரணிகளும் இருக்கின்றனர்.

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடித்தீர்கள. இப்போது அந்த அமைச்சர் எங்கே இருக்கின்றார். இப்போது நீங்கள் சூழ்ச்சிதாரர்களாக இருக்கின்றீர்கள். இதேபோன்று செய்ய வேண்டும் என்றால் தற்போது சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையையும் தோற்கடியுங்கள். இது தனிப்பட்ட பிரச்சினையல்ல. சபையின் கௌரவம் தொடர்பான பிரச்சினையே. இந்த சபையை எந்தளவுக்கு கேவலப்படுத்தும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளீர்கள்.

அந்தத் தேர்தல் இந்தத் தேர்தல் என்று ஜனாதிபதி கூறுகின்றார். ஆனால் நீங்கள் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை விடயத்தில் எடுக்கும் தவறான தீர்மானங்கள் உங்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும். இதனை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று போராட வேண்டி வரும் என்று நீங்களே கூறும் நிலைமை வரும். மக்கள் தியவன்னா ஓயாவில் அனைவரையும் தள்ளும் நிலைமை ஏற்படும்.

சபாநாயகருக்கு சுயகௌரவம் இருந்தால் அவர் பதவி விலகுவார். தமது செயற்பாடு தவறு என்றால் தயவு செய்து ஏற்றுக்கொண்டு பதவி விலகிவிடுங்கள் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )