
சிவராத்திரி விரதத்துக்கு தடையேற்படுத்தும் பிக்குகளின் அடாவடியை நிறுத்தப் போவது யார் ?
சிவராத்திரி விரதம் மற்றும் வழிபாடுகளுக்கு தடையேற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கிறோம்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் ஒருசில பிக்குகள் தாங்களே தான் ஜனாதிபதி, அதிகாரம் தம்மிடம்தான் உள்ளது என்று நினைத்துக் கொண்டு அடாவடித்தனம் செய்கிறார்கள்.முழு தேசத்தையும் குழப்பி விடும் இவ்வாறானவர்களின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி விசேட கவனம் செலுத்த வேண்டும் என அரச தரப்பு எம்.பி.யான எம்.முஷாரப் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வன விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
சிவராத்திரி விரதத்துக்கும்,வழிபாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் ஒரு தரப்பினர் செயற்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.இது உண்மையாயின் அது வன்மையாக கண்டிக்கத்தக்கது.மத சுதந்திரம் மற்றும் உரிமைகளை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் ஒருசில பௌத்த பிக்குகள் தாங்கள் தான் ஜனாதிபதி,பிரதமர் அரசாங்கம் என்று நினைத்துக் கொண்டு செயற்படுகிறார்கள்.பொத்துவில் பகுதியில் உள்ள பௌத்த பிக்கு ஒருவர் மிக மோசமான முறையில் நடந்து கொண்டு மக்களையும்,நாட்டையும் குழப்பி விடுகிறார்.
மத வழிபாடுகளுக்கு உரிமை உண்டு.சிவராத்திரி வழிபாடுகளுக்கு அரசாங்கம் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.அரசாங்கத்தின் தீர்மானங்களை அடிமட்டத்தில் உள்ளவர்கள் செயற்படுத்துவதில்லை.
சிறுபான்மை அரசியல் தலைமைகளுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.பேசுபொருளாக உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு முன்னர். ஒரு தரப்பினரால் முன்னெடுக்கப்படும் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி விசேட பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றார்.