
வருகிறார் என்று சொன்னார்கள்; உயிரின்றி வருகிறார் என்று சொல்லவில்லையே காந்தி தேசம் கைவிட்டது தமிழர் தேசம் கதறுகிறது
இந்தியாவில் உயிர்நீர்த்த சாந்தனின் புகழுடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பிலிருந்து தரைவழியாக வல்வெட்டித்துறை உடுப்பிட்டிக்கு எடுத்துவரப்பட்ட நிலையில் வவுனியாவிலிருந்து உடுப்பிட்டி வரை உள்ள வீதிகள் நகரங்கள், கிராமங்களில் திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் சாந்தனின் புகழுடலுக்கு மலர்கள் தூவி, மலர்மாலைகள் அணிவித்து கதறியழுது கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
அத்துடன் சாந்தனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மக்கள் இந்திய, தமிழக அரசுகளை கடுமையாக திட்டித்தீர்த்ததுடன் தனது இறுதி ஆசையாக தாயாரின் கையால் ஒருவேளை உணவாவது அருந்த வேண்டுமென்ற சாந்தனின் இறுதி ஆசையையும் இந்த இரு அரசுகளும் நிராசையாக்கி விட்டதாகவும் கூறி சாபமுமிட்டனர்.
சாந்தனின் புகழுடல் உடுப்பிட்டிக்கு கொண்டுவரப்பட்டதை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமையினை தமிழ் தேசிய துக்கதினமாக அனுஷ்டிக்க பொது அமைப்புக்கள் பகிரங்க வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் சாந்தனின் புகழுடல் ஊர்தி பவனியாக அவரது சொந்த இடமான வல்வெட்டித்துறை உடுப்பிட்டிக்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில் வடக்கு மாகாணம் முழுவதுமே சோகத்தில் மூழ்கியிருந்தது.
இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டு 33 வருடங்களாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த நிலையில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் இலங்கைக்கு அனுப்புவதில் ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் காரணமாக திருச்சியில் உள்ள இலங்கை தமிழருக்கான சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு உடல்நல குறைவு ஏற்பட்டதன் காரணமாக கடந்த ஜனவரி 24 ஆம் திகதி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 28 ஆம் திகதி புதன்கிழமை சாந்தன் உயிரிழந்தார்.
இவ்வாறு உயிரிழந்த சாந்தனின் உடல் வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட போதிலும் குடும்பத்தாரிடம் வழங்கப்படாது நீண்ட இழுத்தடிப்பு இடம்பெற்றது. பெரும் இழுபறிக்கு மத்தியில் சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் சாந்தனின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து சாந்தனின் உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அஞ்சலி நிகழ்வுகளை அரசியல் கைதிகளின் விடுதலைக்காக செயற்பட்டு வரும் குரலற்றவர்களின் குரல் அமைப்பு பொறுப்பேற்றது.இதற்கமைய நீர் கொழும்பில் இருந்து எடுத்துவரப்பட்ட சாந்தனின் புகழுடல் அடங்கிய பேழை வவுனியாவில் வைத்து குரலற்றவர்களின் குரல் அமைப்பு பொறுப்பேற்று அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் சாந்தனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறை உடுப்பிட்டிக்கு எடுத்து வரப்பட்டது.
மாங்குளத்தில் அஞ்சலி
மாங்குளம் வந்த சாந்தனின் புகழுட லுக்கு முல்லைத்தீவு – மாங்குளம் சந்திப் பகுதியில் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் உணர்வுபூர்வமாக அஞ்சலி மேற்கொள்ளப்பட்டது.மேலும் இந்த அஞ்சலி நிகழ்வில் பொதுமக்கள் அரசியல் பிரமுகர்கள், சமூகசெயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு உணர்வுபூர்வமாக தமது அஞ்சலிகளை செலுத்தினர் .அதனைத்தொடர்ந்து ஊர்தி தொடர்ந்து பயணித்து கிளிநொச்சியை சென்றடைந்தது.
கிளிநொச்சியில்…
கிளிநொச்சி வந்தடைந்த சாந்தனின் புகழுடல் அஞ்சலிக்காக டிப்போ சந்தியில் அமைக்கப்பட்ட அஞ்சலி மண்டபத்தில் வைக்கப்பட்டது.தொடர்ந்து மூத்த போராளி காக்கா ஈகைச் சுடரை ஏற்றி வைத்தார். பின்னர் தேசிய உணர்வுக் கொடியை போர்த்தி மலர் மாலை அணிவித்து சிறிதரன் எம்.பி. அஞ்சலி செலுத்தினார்.தொடர்ந்து, முன்னாள் போராளிகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் உள்ளிட்டோர் மலர் மாலை அணிவித்து தேசிய உணர்வுக் கொடி போர்த்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
கொடிகாமத்தில்…
கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சாந்தனின் புகழுடல் கொடிகாமம் நகரப்பகுதியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டபோது பெருமளவிலான மக்கள் ஒன்று திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
நெல்லியடியில்…
மக்களின் அஞ்சலியை தொடர்ந்து பயணித்த சாந்தனின் ஊர்தி பவனி நெல்லியடியை சென்றடைந்த நிலையில் நெல்லியடி பஸ் நிலையத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.இதன் போது செல்வராசா கஜேந்திரன் சிஎம்.பி. சிவகுரு ஆதீன குரு முதல்வர் வேலன் சுவாமிகள் மற்றும் பெருமளவிலான மக்கள் ஒன்று திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
தீருவிலில் திரண்ட மக்கள்
இதனைத் தொடர்ந்து சாந்தனின் ஊர்தி பவனி வல்வெட்டித்துறை – தீருவில் நோக்கி பயணித்து தீருவிலில் மைக்கப்பட்டிருந்த விசேட இடத்தில் சாந்தனின் புகழுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு கதறியழுது அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து சாந்தனின் சாந்தனின் புகழுடல் அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று திங்கட்கிழமை காலை 10 மணிக்கு உடுப்பிட்டியில் உள்ள அவரது வீட்டில் இறுதிக்கிரியை இடம்பெற்று அதனை தொடர்ந்து அவரது குடும்ப மயானமான எள்ளம்குளம் இந்து மயானத்தில் தனக்கிரியை இடம்பெறவுள்ளது.