திருமலை பொதுச்சபைக் கூட்டங்களில் இடம்பெற்ற தலைவர்,செயலாளர் தெரிவுகள் இரத்து

திருமலை பொதுச்சபைக் கூட்டங்களில் இடம்பெற்ற தலைவர்,செயலாளர் தெரிவுகள் இரத்து

திருகோணமலையில் நடத்தப்பட்ட பொதுச்சபை கூட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தலைவர் மற்றும் செயலாளர் தெரிவுகளை இரத்துச் செய்ய இலங்கை தமிழரசுக் கட்சி உடன்பட்டுள்ளது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் நிர்வாக தெரிவுகளை இரத்து செய்யக் கோரி, இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர் சந்திரசேகரம் பரா என்பவர் தாக்கல் செய்த மனு நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே பொதுச்சபை கூட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தலைவர் மற்றும் செயலாளர் தெரிவுகளை இரத்துசெய்ய இலங்கை தமிழரசுக் கட்சி உடன்பட்டுள்ளது.

கடந்த 21.01.2024மற்றும் 27.01.2024ஆம் திகதிகளில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்சபை கூட்டங்களும், குறித்த இரண்டு கூட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தெரிவுகளும் சட்டத்திற்கு முரணானதும் செல்லுபடியற்றதும் என்ற மனு தாக்கல் செய்யப்பட்டது .இந்த வழக்கில் மாவை சேனாதிராஜா, சி. ஸ்ரீதரன், எம்.சுமந்திரன், சண்முகம் குகதாசன் உட்பட தமிழரசு கட்சியின் ஏழு முக்கியஸ்தர்கள் எதிர் மனுதாரர்களாக பெயர் குறிப்பிடப்பட்டு அவர்களுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து கடந்த 19 ஆம் திகதி நடக்கவிருந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் நேற்று 29 ஆம் திகதிவரை இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.இந்நிலையிலேயே திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவை இரத்துச் செய்யும்படி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீதான வழக்கு மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் நேற்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, மாவை சேனாதிராசா, சி.சிறிதரன், ச.குகதாசன், சீ.யோகேஸ்வரன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகள் கே.வி.தவராசா, புவிதரன் ஆகியோர் முன்னிலையாகினர். இந்த வழக்கில் வழங்கப்பட்ட இடைக்காலத் தடையை நீடிக்க வேண்டுமென வழக்காளி சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் கோரினார்.

இதற்குப் பதிலளித்த பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணி கே.வி.தவராசா,

இது சாதாரண எல்லை, காணி பங்கீட்டு வழக்கல்ல. ஒரு இனத்துடன் தொடர்புடைய, பாரம்பரிய கட்சியுடன் தொடர்புடைய வழக்கு.இந்த வழக்கை தொடர்ந்து நீடிக்க, தொடர்ந்து நடத்த நாம் தயாரில்லை. இதனால் இனநலனில் அடிப்படையில் வழக்கை முடித்து, கட்சியை இயங்கச் செய்வதற்காக சில விட்டுக்கொடுப்புக்களை செய்யவும் தயாராக இருக்கிறோம். வழக்காளிகள் கோரும் நிவாரணங்களை நாம் வழங்கத் தயாராக இருக்கிறோம்.

தமிழ் அரசு கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டி நடந்ததாலேயே இந்த நிலைமை வந்தது. சிறிதரன் வெற்றி பெற்றிருக்காவிட்டால் இந்த வழக்கே வந்திருக்காது. ஆனால் சிறிதரன் பெரும்பான்மையான வாக்குகளால் வென்றார். அவர் அந்த வெற்றியையும் துறந்து, கட்சியை மீள இயங்க செய்ய விரும்புகிறார். அதனால் தலைவர் தெரிவையும் மீள நடத்த தயாராக இருக்கிறோம் என்றார்.

முன்னதாக நடந்த கட்சி மட்ட ஆலோசனையில், இந்த நிலைப்பாட்டிலேயே அனைவரும் இருப்பது என தீர்மானிக்கப்பட்டது. ஏனெில் ஆட்சேபனை தெரிவிக்க முற்பட்டால் வழக்கு நீண்டு செல்லும் என்பதால் அந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. அதற்கு சம்மதித்த பதில் செயலாளர் ப.சத்தியலிங்கம், குலநாயகம் ஆகியோர் நேற்று மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்க முற்பட்டனர். அவர்கள் சார்பில் எழுந்த சட்டத்தரணியொருவர், அவர்கள் ஆட்சேபணை தாக்கல் செய்யவுள்ளனர், அதற்கு திகதி குறிப்பிடும்படி கோரினர்.

இதை சட்டத்தரணி கே.வி.தவராசா ஆட்சேபித்தார். அவர்கள் இருவரும் இந்த மன்றிலேயே இருப்பதால் அவர்களின் நிலைப்பாட்டை நேரில் கேட்க வேண்டுமென்றார். இதற்கு அவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஆட்சேபனை தெரிவித்தார்.

எனினும், இது கட்சி சார்ந்த வழக்கு, அனைவரும் கட்சி பிரமுகர்கள், கட்சி தீர்மானமும் இதில் தொடர்புபட்டுள்ளது என கே.வி.தவராசா சுட்டிக்காட்டியதையடுத்து, அவர்களின் நிலைப்பாட்டை கேட்க நீதிமன்றம் சம்மதித்தது. இருவரையும் அழைத்த நீதிமன்றம், அவர்களின் நிலைப்பாட்டை கேட்டது. இதன்போது அவர்களும் தமக்கு ஆட்சேபனையில்லையென்றனர்.

இந்த வழக்கில் 7 பிரதிவாதிகள் உள்ளனர். அதிலொருவரான எம்.ஏ.சுமந்திரன்,அவரது தாயார் காலமானதால் மன்றில் முன்னிலையாகவில்லை. இதனையடுத்து அவரது நிலைப்பாட்டை அறிய ஏப்ரல் 5ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வழக்கு விசாரணையின் பின் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா கூறுகையில்,

திருகோணமலையில் ஜனவரி 21 ஆம் திகதி இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் பொதுக் குழுக் கூட்டமும் அதன் தெரிவும் அத்துடன் ஜனவரி 27 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டம் ஆகியவற்றை இரத்துச் செய்யக் கோரிய வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த கோரிக்கைக்கு நாம் உடன்பட்டோம். அதற்கான காரணத்தையும் நாம் நீதிமன்றில் முன்வைத்தோம். அதாவது, குறித்த வழக்கானது ஒரு சமூகத்திற்கு எதிராக, கட்சிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்காகும். இதனை நீண்டகாலத்திற்கு கொண்டு செல்வோமேயானால் அது சமூகத்திற்கு செய்கின்ற துரோகமாகவும், கட்சின் பாதிப்புக்கு நாங்களும் ஒரு காரணமாக இருந்ததாகவும் அமைந்துவிடும். எனவே கட்சியினதும் மக்களினதும் நலனினை கருத்தில் கொண்டு இந்த வழக்கினை விரைவாக முடிவுறுத்துவதற்கு இவ் வழக்கில் எதிராளியாக குறிப்பிட்டு வருகை தந்த அனைவருடைய சம்மதத்தின் அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்த தரப்பினரின் வேண்டுகோளுக்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அதனை ஏற்றுக் கொண்டோம். அதாவது,பொதுச் சபைக் கூட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தலைவர் மற்றும் செயலாளர் தெரிவுகளை இரத்துச் செய்ய இலங்கை தமிழரசுக் கட்சி உடன்பட்டுள்ளது.

எமது தரப்பில் இரண்டு விடயங்களை முன்வைத்திருந்தோம். அதாவது,வழக்குத் தாக்கல் செய்த தரப்பினர் எந்தவொரு நிபந்தனைகளும் இன்றி வழக்கை மீளப்பெற வேண்டும். இல்லாவிட்டால் அவர்களின் வேண்டுகோளை முற்றுமுழுதாக ஏற்றுக் கொண்டு வழக்கை முடிவுறுத்துவது என்பதாகும். அந்தவகையில் அவர்களுடைய வேண்டுகோளை ஏற்றுக் கொண்டோம். எமது நோக்கம் வழக்கை விரைவாக முடிவுறுத்துவதேயாகும். அதைத் தவிர யார் வெல்வது, யார் தோற்பது என்பது அல்ல. எனினும் துரதிஷ்டவசமாக ஆறாவது எதிரியாக குறிப்பிடப்பட்டிருக்கின்ற எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை. எனவே அவருடைய நிலைப்பாட்டை அறிவதற்காக வழக்கு வருகின்ற ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )