
பஸில் வந்த பின் முக்கிய முடிவுகள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்குவதா? இல்லையா? என்பது தொடர்பில் கட்சியின் அரசியல் குழுவே முடிவுவெடுக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற கட்சிக் கூட்டத்தின் பின்னர், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவா? பஸில் ராஜபக்ஷவா? அல்லது நாமல் ராஜபக்ஷவா? என்று ஊடகவியலாளர்களால் கேள்வியெழுப்பப்பட்டது.
அதன்போது பதிலளித்த மகிந்த ராஜபக்ஷ கூறுகையில்,
கட்சியின் வேலைத் திட்டங்கள் தொடர்பில் நாங்கள் கலந்துரையாடியுள்ளோம். பஸில் ராஜபக்ஷ அடுத்த வாரத்தில் இலங்கை வருவார். அதன் பின்னர் கட்சியின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்படும்.
இதேவேளை ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கட்சியின் அரசியல் குழுவே தீர்மானிக்க வேண்டும். ரணில் விக்கிரமசிங்க எமது கட்சியை சேர்ந்தவர் அல்ல. இதனால் எமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்குவதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார்.
இதேவேளை நாமல் ராஜபக்ஷ தற்போது விகாரைகளுக்கு செல்கின்றார் இது ஏன் என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ஷ மேலும் கூறுகையில்,
தந்தையின் வழியில் பயணிக்க வேண்டும் அல்லவா, அதன்படி அவர் விகாரைகளுக்கு செல்கின்றார் என்று நினைக்கின்றேன் என்றார்.