
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வு இன்று ஆரம்பம் இலங்கைக்கு எந்தவித மாற்றமும் ஏற்படாது
ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான அறிக்கைகளால் புதிய மாற்றங்கள் ஏதும் ஏற்படும் சந்தர்ப்பம் இல்லை எனத் தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். பூகோள அரசியலுக்காக வல்லரசுகளின் நோக்கங்களை நிறைவேற்றுவதாகவே அமையும் என தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஜெனீவாவில் இன்று 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை தொடர்பில் அங்கு எவ்வாறான நிலைப்பாடு எடுக்கப்படுமென அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐ.நா.மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான வாய்மொழி மூலமான அறிக்கைகள் மார்ச் மாதம் வெளியாகும்.
வாய்மொழி மூலமாக அறிவிப்புகள் இலங்கைக்கு மாற்றத்தை ஏற்படுத்தவோ அல்லது தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற சர்வதேச நீதியை நோக்கியதான முன்னெடுப்புக்கள் நிகழும் என்பதற்கான சந்தர்ப்பம் இல்லை என்றே கூறவேண்டும்.
ஏனெனில் தற்போது இஸ்ரேல்- பலஸ்தீனப் பிரச்சனையில் வல்லரசு நாடுகள் இரு பகுதிகளாக பிரிவடைந்துள்ளன.பூகோள அரசியலில் வல்லரசு நாடுகள் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக செயற்பாட்டு வரும் நிலையில் மேற்கு நாடுகளின் நம்பகத்தன்மை தொடர்பில் கேள்விகள் எழுகின்றன.
ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரில் 47 உறுப்பு நாடுகள் பங்கேற்க உள்ள நிலையில் அவர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் கவனித்த பின்னரே செப்டெம்பர் மாதம் இடம் பெற உள்ள அமர்வில் என்ன விடயங்களை மேற்கொள்ளலாம் எனத் தீர்மானிக்க முடியும்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாட்டை பொறுத்தவரையில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினால் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற போர் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு நீதியைப் பெற முடியாது.
இலங்கையை அரசுக்கு எதிராக ஏற்கனவே மனித உரிமைகள் பேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சிலவற்றை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை பலவற்றை ஏற்க மாட்டோம் எனவும் கூறிவிட்டார்கள்.
இவ்வாறான நிலையில் மனித உரிமைகள் பேரவையில் எடுக்கப்படுகின்ற இலங்கை தொடர்பான தீர்மானங்களால் இலங்கை அரசாங்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நாடுவதே தமிழ் மக்களுக்கு நியாயத்தை பெற்றுத் தரும் என வலியுறுத்தி வருகிறது.
இதற்கு எடுத்துக்காட்டாக, பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நீதியை பெற்று கொடுப்பதற்காக ஒரு நாடு சர்வதேச நீதிமன்றத்துக்கு விவகாரத்தைக் கொண்டு செல்ல முடியும்.
மனித உரிமைகள் பேரவையில் மேற்கு நாடுகள் நினைத்தால் தமிழ் மக்கள் சார்ந்து தீர்மானங்களை வலுவாக முன்வைத்தால் மனித உரிமைகள் பேரவையின் நம்பிக்கைத் தன்மையை கூட்டும்.
மியான்மாரில் இடம்பெற்ற இனப் படுகொலைக்கு எதிராக கன்பியா ஒரு பிரேரணையை கொண்டு சென்றது இலங்கை தொடர்பிலும் சர்வதேச நீதிமன்றத்தை நோக்கி தீர்மானங்களை மனித உரிமைகள் பேரவையைத் தாண்டி கொண்டு செல்ல வேண்டும்.
ஆகவே தற்போதைய ஐ.நா. கூட்டத் தொடரில் உலக வல்லரசுகளின் இரு துருவப் போட்டித் தன்மையை அடிப்படையாக வைத்து காசா பகுதியில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்படுமாயின் அது தமிழ் மக்களின் எதிர்கால நீதிச் செயல்பாடுகளுக்கு உந்து சக்தியாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.