இந்தியப் பக்தர்கள் வராததால் கவலை; யாழ்.மறை மாவட்ட குருமுதல்வர்

இந்தியப் பக்தர்கள் வராததால் கவலை; யாழ்.மறை மாவட்ட குருமுதல்வர்

வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழாவில் இந்தியாவிலிருந்து பக்தர்கள் வழமையாக பங்குகொண்டிருந்த நிலையில், இம்முறை அவர்கள் வருகை தராது முழுமையாக பகிஷ்கரித்திருக்கின்றமை மிகவும் கவலைக்குரிய விடயம் என்று தெரிவித்த யாழ்.மறை மாவட்ட குருமுதல்வர் ஜே.பி.ஜெயரட்ணம் அடிகளார், இம்முறை திருவிழா முழுமையாக நடைபெறவில்லை என்ற உணர்வை தந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுப்பாலமாக நீண்ட வரலாற்றை கொண்டிருக்கும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை இம்முறை இந்திய பக்தர்கள் முழுமையாக பகிஷ்கரித்திருந்தமை இலங்கை பக்தர்களுக்கு மிகப்பெரும் உணர்வுபூர்வமான ஒரு அதிருப்தி நிலைமையை தோற்றுவித்திருந்தது.

மீனவர் பிரச்சினையை அடிப்படையாக வைத்து இம்முறை திருவிழாவில் பங்கேற்காமல் இருக்க இந்திய மீனவர்கள் தீர்மானித்த நிலையில்,அந்நாட்டு பக்தர்களுக்கு திருவிழாவில் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்திருந்த ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொண்டிருந்த அதேவேளை,ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க , ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ச.இளங்கோவன் , யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் , கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா உள்ளிட்ட அதிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நேற்று முன்தினம் சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்ற நிலையில்,இந்திய பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொள்வதில்லை என முழுமையாக பகிஷ்கரித்திருந்த நிலையில்,அது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே யாழ்.மறை மாவட்ட குருமுதல்வர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய பக்தர்கள் இம்முறை கச்சத்தீவு திருவிழாவை பகிஷ்கரித்திருந்தமை எங்களுக்கு மிகவும் கவலைக்குரிய விடயமாக அமைந்திருக்கிறது.அவர்கள் இந்த திருவிழாவில் பங்கெடுக்காமை திருவிழா முழுமையாக இடம்பெறவில்லை என்ற உணர்வையே எங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.இருந்தாலும் இந்த திருவிழா செபங்களிலும் வழிபாடுகளிலும் இந்திய பக்தர்களுக்காகவும் பிரார்த்தனை செய்தோம்.ஆன்மீக ரீதியில் அவர்களையும் எங்களுடன் இணைத்திருந்தோம்.

ஆனால்,எதிர்காலத்திலும் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறுவதை நாங்கள் விரும்பவில்லை.குறிப்பாக மக்களுடைய பக்தி உணர்வுகள் மற்றும் திருவிழாக்களை பகிஷ்கரிக்கும் செயற்பாடுகளை நாங்கள் விரும்பவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழாவில் இம்முறை இலங்கை பக்தர்கள் 5200 பேர் வரையில் கலந்து கொண்டிருந்ததுடன்,120 படகுகள் மூலம் மேற்படி பக்தர்கள் கச்சதீவுக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )