
கணவனை சுட்டுக் கொன்ற பொலிஸார் 200 மில்.ரூபா நஷ்டஈடு கோரி நீதிமன்றில் மனு
யுக்திய நடவடிக்கையின் போது லொறி சாரதி ஒருவரை சுட்டுக் கொன்றதன் மூலம் அடிப்படை மனித உரிமைகளை மீறியமைக்காக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உள்ளிட்டோரிடம் இருந்து 200 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த ரொஷான் குமாரசிறியின் சார்பில் மூன்று பிள்ளைகளின் தாயான அவரது மனைவி கமனி ரூபிகா பிரியங்கனி இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
நாரம்மல பொலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் கே.குணவர்தன, பொலிஸ் கான்ஸ்டபிள் கே.எம்.சாமுதித பண்டார குலசேகர, நாரம்மல பொலிஸ் நிலைய பொறுப்பாளர், பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம், அவரது கணவர் லொறியில் பயணித்த போது, யுக்திய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நாரம்மல பொலிஸ் உப பொலிஸ் பரிசோதகர் கே.குணவர்தனவினால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் அவரது கணவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தது தெரியவந்தது.
எவ்வித நியாயமான காரணமும் இன்றி பொலிஸாரால் கணவரின் மரணம் காரணமாக தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர் கோரியுள்ளார்.
அதற்காக, பிரதிவாதிகளிடமிருந்து 200 மில்லியன் ரூபா நஷ்டஈடு வசூலிக்க உத்தரவிடக் கோரிய மனுதாரர், வாகனச் சோதனையின் போது பொலிஸ் அதிகாரிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களைத் தயாரிக்க உத்தரவிடுமாறும் உயர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.
இதேவேளை, கொலையுடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர் இன்று நாரம்மல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 2024 மார்ச் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.