
ஜனாதிபதி ரணிலை பஸ் திருத்துநராக்கிய டக்ளஸ்
நாடு இன்றைக்கு இருக்கின்ற சூழ்நிலையிலே ரணில் விக்கிரமசிங்காவைத் தவிர வேறு ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக தென் இலங்கையிலே இருப்பதாக தெரியவில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் இடம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் நீங்கள் யாருக்கு ஆதரவளிப்பீர்கள் என ஊடகவியளாளரால் கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பதிலளிக்கும் போது,
விடிய விடிய இராமர் கதை விடிந்த பின்னர் ராமன் சீதைக்கு என்ன முறை என்பது போல நீங்கள் கேட்கும் கேள்வி இருக்கிறது. ஜனாதிபதியாக அவர் பாராளுமன்றத்திற்கு வருவதற்கு முன்னரே நான் இது பற்றி கூறியிருக்கின்றேன்.
இன்றைக்கு நாடு இருக்கின்ற நிலையிலே வேறு தலைவர்கள் தென் இலங்கையிலே இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அது அரசியல் உரிமை பிரச்சினையாக இருக்கலாம் அபிவிருத்திப் பிரச்சினையாக இருக்கலாம் பொருளாதார மீட்சிப் பிரச்சினையாக இருக்கலாம் எதிலும் அவரை விட வேறொருவர் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
ரணில் இந்த நாட்டை பொறுப்பேற்கும் போது பழுதடைந்த ஒரு பஸ் வண்டியை பொறுப்பேற்ற மாதிரியே பொறுப்பெடுத்து திருந்தார். ஒன்றரை வருடத்தில் அதன் இயந்திரத்தை ஓட வைத்து பிரேக்கினை பொருத்தி டயர்களை பொருத்தி ஓடச் செய்திருக்கிறார்.
இன்னும் ஒன்றரை இரண்டு வருடங்களில் ரிங்கறிங்,பெயின்ரிங், வயறிங் போன்ற வேலைகளைச் செய்து ஓடுகின்ற தரமான பஸ் வண்டியை உருவாக்குவார் என நம்புகின்றோம் என தெரிவித்தார்.