
தான் இறக்குமதி செய்த மருந்தை பயன்படுத்த மறுக்கும் கெஹலிய; சிங்கப்பூர் மருந்தை தருமாறு அடம்பிடிப்பு
தரமற்ற மருந்து இறக்குமதி விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, தான் இறக்குமதி செய்த மருந்துகளை பயன்படுத்துவதை நிராகரிப்பதாகவும், தனக்கென தனிப்பட்ட ரீதியில் சிங்கப்பூரில் இருந்து கொண்டுவரப்பட்ட மருந்தையே தான் பயன்படுத்துவேன் என்று அடம்பிடிப்பதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் ஒன்றியத்தின் தலைவர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே வைத்தியர் ருக்ஷான் பெல்லன இதனை கூறியுள்ளார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தான் இறக்குமதி செய்த மருந்துகளை தன்னால் குடிக்க முடியாது என்று நிராகரிப்பதாகவும், அவருக்காக சிங்கபூரில் இருந்துகொண்டுவந்த மருந்தைதான் குடிக்க வேண்டும் என்று அவர் கூறுவதாகவும் கூறப்படுகின்றது.
அதேபோன்று சிறைச்சாலை வைத்தியசாலையில் இருக்க முடியாது, தன்னை தனியார் வைத்தியசாலைக்கு மாற்றுமாறு அவர் கேட்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு அவரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமாக இருந்தால் அங்குள்ள வைத்திய அதிகாரியை கைது செய்ய வேண்டும்.
உண்மையான நோயுள்ளவர்கள் சிறைகளுக்குள் மரணிக்கும் நிலைமை இருக்கையில், இடப்பற்றாக்குறை இருப்பதாக கூறி வைத்தியசாலைக்கு மாற்றப்படாத கைதிகள் இருக்கின்ற போதும் இவ்வாறானவர்களை எப்படி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்க முடியும். முறைப்படி சிறைக்கூடத்திற்குள் சென்ற பின்னர் அங்கு சுகமில்லை என்றாலே வைத்தியசாலைக்கு மாற்ற வேண்டும். ஆனால் இவரை நேரடியாக வைத்தியசாலைக்கே கொண்டு சென்றுள்ளனர். இதனால் மருந்து மோசடியாளர்கள் மாத்திரமன்றி சிறைச்சாலைகளில் இவ்வாறான வைத்தியர்களும் இருக்கின்றனர். பிரமுகர்களை கவனிக்கும் இவ்வாறான வைத்தியர்கள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.