
நாடு வங்குரோத்தடைந்துள்ள நேரத்தில் 2000 இலட்சம் ரூபா செலவில் சுதந்திர தினக் கொண்டாட்டம்
நாடு வங்குரோத்தடைந்துள்ள நேரத்தில் 2000 இலட்சம் ரூபா செலவழித்து அரசாங்கம் சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளது என்றும், இந்த கொண்டாட்டத்தால் நாட்டுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்றும் ஐக்கிய மக்கள் சக்தி தேசிய அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
நாட்டின் 76ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அந்த தினத்தை கொண்டாடும் அளவுக்கு மக்களுக்கு சுதந்திரம் உள்ளதா? என்ற கேள்விகள் எழுகின்றன. இந்த கொண்டாட்டத்திற்காக 2000 இலட்சம் ரூபா செலவழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் அபிமானத்தை உலகுக்கு கூறுவதற்காகவே இவ்வாறு நிகழ்வை நடத்துவதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் இந்தளவு நிதி செலவழித்து நிகழ்வை நடத்துவதால் மக்களுக்கு என்ன கிடைக்கப் போகின்றது.
அத்துடன் வழமையான சம்பிராதப்படி நாட்டின் தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். ஆனால் இம்முறை அவ்வாறான உரையை நிகழ்த்தவில்லை. இதனால் எவ்வாறான சுதந்திர தினத்தை நாங்கள் கொண்டாடினோம் என்று தெரியவில்லை.
மக்கள் முகம்கெடுத்துள்ள பொருளாதார நெருக்கடி மிகவும் பயங்கரமானது. கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தற்போது ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. தேசிய சொத்துக்களை விற்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது. நாட்டுக்கு சுமையான நிறுவனங்களை மறுசீரமைப்பதில் பிரச்சினையில்லை. ஆனால் நாட்டுக்கு வருமானத்தை கொண்டுவரும் நிறுவனங்களை விற்பதால் பிரச்சினைகள் ஏற்படும்.
நாங்கள் இன்னும் வங்குரோத்து நிலையில் இருந்து மீளவில்லை. இவ்வாறான நிலைமையில் 2000 இலட்சம் ரூபா செலவில் சுதந்திர தின கொண்டாட்டத்தை நடத்த வேண்டுமா? என்று கேட்கின்றோம்.