
2022 இன் பின்னர் ; 10 இலட்சம் பேர் வேலை இழப்பு
2022 ஆம் ஆண்டு முதல் நாடு திவாலான பின்னர் பத்து இலட்சம் பேர் வேலை இழந்துள்ளதாகவும் இந்த நாட்டை அந்த இளம் தலைமுறையினரிடம் ஒப்படைத்து, நாட்டை இந்த ஆபத்தில் இருந்து காப்பாற்றும் பொறுப்பை அவர்களுக்கு வழங்குவதே தன்னுடைய நோக்கமெனவும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய குடியரசு முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட மாநாட்டில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர், வடக்கிலும் தெற்கிலும் துப்பாக்கி ஏந்திய பல சந்தர்ப்பங்களில் அரசாங்கங்களை மாற்ற முயற்சித்ததை நாம் அறிவோம். இளைஞர்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர். ஆனால் 2022ஆம் ஆண்டு இந்த நாட்டின் இளம் தலைமுறையினர், சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என அனைவரும் ஒன்றிணைந்து, இருந்த அரசாங்கத்தை நிராயுதபாணியாக விரட்டியடிக்க முடிந்தது எனவும் தெரிவித்தார்.
இன்று ஒரு லீற்றர் டீசல் 220 ரூபாவிற்கு நாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. ஆனால் 360 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு பொறுப்பான அமைச்சராக இருந்தபோது 134 ரூபாவாக இருந்த டீசலை 95 ரூபாவாக கொண்டு வந்தோம். 85 ரூபாவுக்கு விற்கப்பட்ட மண்ணெண்ணெய் 55 ரூபாவுக்கு கொண்டு வரப்பட்டது.
இவ்வாறான மாற்றங்கள் செய்தும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை இலாபகரமான நிறுவனமாக மாற்றினோம். எரிபொருள் விநியோக நிறுவனங்களிடமிருந்து அரசாங்கம் மிக அதிக வரிகளை வசூலிப்பதால் அதன் சுமை மக்கள் மீது விழுந்துள்ளது.
வரி இல்லாமல் அரசுக்கு பணம் சம்பாதிக்க வழி இல்லையா? நாட்டின் மீதும், மக்கள் மீதும் அக்கறையுள்ள அரசு, வரி நிலுவை வைத்திருப்பவர்களிடம், பணம் வைத்திருப்பவர்களிடம் வரி வசூலிக்க நடவடிக்கை வேண்டும். அதனால்தான் நாட்டைப் பற்றி சிந்திக்கும் மக்களைப் பற்றி சிந்திக்கும் அரசாங்கம் வேண்டும். அதற்காகத்தான் ஐக்கிய குடியரசு முன்னணி உருவாக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

