சிறிதரனுக்கு -184,சுமந்திரனுக்கு -137 வாக்குகள் தமிழரசுக் கட்சியின் தலைவராக சிறிதரன்; இரகசிய வாக்கெடுப்பில் 321 பேர் வாக்களிப்பு ; 74வருட வரலாற்றில் முதல் முறையாக நடந்த தேர்தல்

சிறிதரனுக்கு -184,சுமந்திரனுக்கு -137 வாக்குகள் தமிழரசுக் கட்சியின் தலைவராக சிறிதரன்; இரகசிய வாக்கெடுப்பில் 321 பேர் வாக்களிப்பு ; 74வருட வரலாற்றில் முதல் முறையாக நடந்த தேர்தல்

இலங்கைத்தமிழரசுக்கட்சியின் புதியதலைவர் தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் 184,வாக்குகளைப் பெற்று 47மேலதிக வாக்குகளால் வெற்றியீட்டியுள்ளார்.

அத்தோடு 321வாக்காளர்கள் பங்குபற்றிய இந்த வாக்கெடுப்பில், சக போட்டியாளர்களான பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் 137வாக்குகளைப்பெற்றதுடன், சீ.யோகேஸ்வரன் சிறிதரனுக்கு ஆதரவாக தனது வாக்கை அளிப்பதாக அறிவித்திருந்ததால் அவருக்கு வாக்குகள் அளிக்கப்படவில்லை.

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைப் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் போட்டியிட்டனர் இதற்கான இரகசிய வாக்கெடுப்பானது திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இடம்பெற்றது.

இதுவரையில் கட்சியின் மூத்த உறுப்பினர்களின் ஒருமித்த கருத்து மூலம் கட்சியின் தலைவர் தெரிவுசெய்யப்பட்டு கட்சி மாநாட்டில் அணியினர் மற்றும் கோப்புகளின் ஒப்புதலைப் பெறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதற்கமைய கட்சியின் 74 ஆண்டுகள் வரலாற்றில் முதல் முறையாக இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டு இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

நேற்று ,இந்தத் தேர்தலில் 321 பேர் வாக்களித்தனர். எனினும் இந்த வாக்களிப்பில் மத்தியகுழு உறுப்பினர்கள் 43 பேரும், மேலதிகமாக 9 பேரும், தொகுதிவாரியாக 280 பேர் (யாழ்ப்பாணம் – 75, கிளிநொச்சி – 20, முல்லைத்தீவு – 25, மன்னார் – 25, வவுனியா – 20, திருகோணமலை – 30, மட்டக்களப்பு – 50, அம்பாறை – 35) உட்பட 333 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதில் கட்சியின் இதுவரையான தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராஜா,தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட தலைவர் இரா.சம்பந்தன் ,பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்கள், பொதுச்சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

குறிப்பாக வடக்கு மற்றும், கிழக்கு மாகாணங்களிலுள்ள மாவட்டக்கிளைகளைகள் மற்றும், கொழும்புக்கிளை உள்ளிட்ட ஒன்பது மாவட்டக்கிளைப் பிரதிநிதிகள், மத்திய செயற்குழுவில் அங்கம்வகிக்கின்ற உறுப்பினர்கள் இந்த தலைவர் தெரிவிற்கான வாக்கெடுப்பில் கலந்துகொண்டு தமது வாக்குகளைப் பதிவுசெய்தனர்.

அந்தவகையில் வாக்கெடுப்பு இடம்பெற்ற நகரசபை மண்டபத்தின் வெளிப்புறமாக ஒவ்வொரு மாவட்டக்கிளை உறுப்பினர்களினதும், மத்தியகுழு உறுப்பினர்களதும் உறுப்புரிமை பரிசோதிக்கப்பட்டு, உறுப்புரிமை உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அவர்களுக்கான கட்சியின் அடையாள அட்டை வழங்கப்பட்டு வாக்கெடுப்பு மண்டபத்திற்குள் கட்சி உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டதுடன், பலத்த பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் வாக்களிப்பு முன்னெடுக்கப்பட்டது.

அதேவேளை மண்டபத்தினுள் வாக்கெடுப்புக்கான ஆயத்தங்கள் இடம்பெற்ற வேளை, இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவரான மாவை சேனாதிராசா, போட்டி வேட்பாளர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோரை அழைத்து நீண்டநேரம் கலந்துரையாடினார்

அதன் பின்னர் இடம்பெற்ற வாக்கெடுப்பின் முடிவில் இலங்கை தமிழரசுக்கட்சியின் புதியதலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் 184 வாக்குகளைப்பெற்று வெற்றியடைந்தார். இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட எம்.ஏ. சுமந்திரன் 137வாக்குகளைப்பெற்றதுடன், சீ.யோகேஸ்வரன் சிறிதரனுக்கு ஆதரவாக தனது வாக்கை அளிப்பதாக அறிவித்திருந்த நிலையில் அவருக்கு யாரும் வாக்களிக்கவில்லை.

இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சியில் வாக்களிக்க தகுதியிருந்தும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர் புறக்கணிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக, மகளிர் அணியின் செயலாளர், பொருளாளர், உப செயலாளர் ஆகியோர் வாக்களிப்பதற்காக அனுமதி வழங்கப்பட்டிருந்தும் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நேற்று இடம்பெறும் இரகசிய வாக்கெடுப்பின் முடிவுகளுக்கமைய தெரிவாகியுள்ள புதிய தலைவர் எதிர்வரும் 28 ஆம் திகதி இடம்பெறும் கட்சியின் தேசிய மாநாட்டின் போது உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்பார் என இலங்கை தமிழரசு கட்சி செயலாளர் பத்மநாதன் சத்தியலிங்கம் முன்னதாக தெரிவித்திருந்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )