திருகோணமலை நகரிலுள்ள 90 வீதமான தமிழ் மக்களை வெளியேற்றத் திட்டம்; கஜேந்திரகுமார் எம்.பி.கூறுகிறார்

திருகோணமலை நகரிலுள்ள 90 வீதமான தமிழ் மக்களை வெளியேற்றத் திட்டம்; கஜேந்திரகுமார் எம்.பி.கூறுகிறார்

கிழக்கில் திருகோணமலை நகரில் வாழுகின்ற 90 வீதமான தமிழ் மக்களை வெளியேற்றுவதற்கான திட்டமாக ‘மெகா சிற்றி’ என்ற திட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சாட்டினார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாள் உள்ளிட்டவர்களை வெள்ளிக்கிழமை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

இந்த இரண்டரை வருடத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோத்தபாய ராஜபக்ஸவை விட மிக மோசமாக ஜனநாயத்தை மறுக்கும் வகையில் செயற்பட்டுவருகின்றார் .இதில் அவர் தமிழ் மக்களுக்கு எதிரான பல நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றார். கிழக்கில் திருகோணமலை நகரில் வாழுகின்ற 90 வீதமான தமிழ் மக்களை வெளியேற்றுவதற்கான திட்டமாக ‘மெகா சிற்றி’ என்ற திட்டம் ரணில் விக்கிரமசிங்காவால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதனால் திருகோணமலையானது தமிழருடைய கைகளில் இருந்து பறிபோகப் போகின்றது.

தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியாக வேண்டும் என்பது ரணில் விக்கிரமசிங்கவின் கடைசிக் கனவு. அந்தக் கனவு சாத்தியமற்றது. ஏன் என்றால், இந்தமுறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்குகள் 3 ஆக பிரியும். அதனால் ரணிலுக்கு வாக்குகள் குறையும். அவர் ஐக்கிய தேசிய கட்சியினுடைய வேட்பாளராக இருந்தால் சில வேளை அவருக்கு வாக்குகள் விழும் வாய்ப்புகள் இருக்கலாம்.

ஆனால் இரண்டரை வருடத்துக்கு முன்னர் சிங்கள மக்கள் விரும்பி வாக்களித்த கோத்தபாயவை அதேமக்கள் துரத்தி வீட்டிற்கு அனுப்பியதன் பிறகு ,அந்த தரப்பினரை அரசியலில் உயிரோடு வைத்திருப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க செய்கின்ற இந்த செயற்பாடுகளை தெற்கில் உள்ள மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

ரணிலுக்கும் இது தெரியும்.அதனால்தான் அவர் தேர்தலில் வெல்வதற்காக தமிழர்களை மீண்டும் ஒரு முறை ஏமாற்றவேண்டும் என நினைக்கின்றார். அதனடிப்படையில் யாழ்ப்பாணத்துக்கு வந்து அவர் கூறுகின்ற கருத்துக்கள், அடுத்த தேர்தலுக்கு பின்னர் செய்வதாகும். தேர்தலுக்கு முதல் செய்யக் கூடியதை சொல்லமாட்டார். அரசியல் கைதிகள் அவரின் கையெழுத்தில் விடுவிக்கப்படலாம் .ஆனால் அவர் அதை செய்யமாட்டார்.

தமிழ் மக்களை தமிழ் தலைவர்களே ரணில் நல்லவர் அவர் வந்தால் எல்லாம் செய்வார் என ஏமாற்றி வைத்துள்ளனர். ரணில் வந்ததின் பின்னர் தனது உண்மையான முகத்தை ரணிலே காட்டிவிட்டார் எனவே இனி இந்த விளையாட்டுக்களுக்கு தமிழ் மக்கள் ஏமாறப் போவதில்லை என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )