தேர்தல் நெருங்குகையில் அடக்குமுறை அதிகரிக்கும் கெடுபிடிச் சட்டங்களை எமது அரசு நீக்கும்

தேர்தல் நெருங்குகையில் அடக்குமுறை அதிகரிக்கும் கெடுபிடிச் சட்டங்களை எமது அரசு நீக்கும்

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மக்களின் கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் நோக்கத்திலேயே அரசாங்கம் நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை நிறைவேற்ற முயற்சிப்பதாகவும் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் முதலில் அதனை நீக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதனை இந்த மாதம் 23, 24ஆம் திகதிகளில் இதனை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவும், அதன்பின்னர் 26ஆம் திகதியளவில் பாராளுமன்றத்தின் அமர்வை முடிவுக்கு கொண்டு வந்து ஒத்திவைத்து பெப்ரவரி 7ஆம் திகதி ஆரம்பிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதில் சில விடயங்கள் உள்ளன. தேர்தல் நெருங்கும் போது மக்கள் கருத்துக்கள் வெளியிடும் உரிமையை ஒடுக்குவதற்கு முயற்சிக்கப்படுகின்றது. இதன்மூலம் அவர்களுக்கு எதிரான எதிர்ப்புகளை கட்டுப்படுத்தி தேர்தலை அவர்களுக்கு சார்பாக பயன்படுத்த திட்டமிடலாம். ஆனால் இவ்வாறு செய்யப் போனால் அரசாங்கத்தின் மீதான மக்கள் எதிர்ப்புகள் மேலும் அதிகரிக்கும். மலேசியாவில் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கப்போய் அங்கிருந்த பிரதமர் இருந்த பதவியையும் இழந்து இறுதியில் சிறைக்கே சென்றார்.

அடுத்ததாக ஒன்லைன் ஊடாகவே இளைஞர்கள் பல்வேறு தொழில் முயற்சிகள் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு செல்கின்றனர். இந்நிலையில் அரசாங்கம் இவ்வாறு சட்டமூலங்களை கொண்டுவருவதன் ஊடாக அதற்கு பாதிப்புகள் ஏற்படும். ஐக்கிய மக்கள் சக்தியும் இளைஞர்கள் தொடர்பில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றது. சர்வதேசத்துடன் அவர்களை இணைக்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த சட்டமூலம் ஊடாக அவை தடுக்கப்படும். இதனால் நாங்கள் அதனை முழுமையாக எதிர்ப்போம் என்பதுடன், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் முதலில் அதனை நீக்க நடவடிக்கை எடுப்போம்.

மறுசீரமைப்பு இன்றியும் மாற்று வழிகள் இன்றியும் இவ்வாறு புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாது. அத்துடன் டெக்ஸ் மெசேஜ்களையும் அரசாங்கம் ஆராயப்போகின்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு செய்வதால் பொருளாதாரத்தை தொழில்நுட்பத்தின் ஊடாக கொண்டு செல்லும் வசதிகளை தமது குறுகிய கால அரசியல் நோக்கத்திற்காக முழுமையாக இல்லாது செய்வே முயற்சிக்கின்றனர் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )