
பௌத்தத்திற்கு பெரும் ஆபத்து; பௌத்த பீடங்கள் ஜனாதிபதிக்கு கடிதம்
திட்டமிட்டு பௌத்தம் தொடர்பில் போலியான நம்பிக்கைகளை மக்கள் மத்தியில் பரப்பி பௌத்தத்தின் மேன்மையை பாதிக்கச் செய்யும் வகையில் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்துமாறு வலியுறுத்தி பௌத்த பீடங்களால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மல்வத்து, அஸ்கிரிய, அமரபுர மற்றும் ராமாஞ்ஞ ஆகிய பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களின் கையெழுத்துடன் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அந்தக் கடிதத்தின் ஊடாக பௌத்த மதத்தை பாதுகாக்கவும், பௌத்தம் தொடர்பில் போலியாக போதனைகளை முன்னெடுப்பவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் எனவும் ஜனாதிபதியை கேட்டுக்கொண்டுள்ளனர்.
பல்வேறு திட்டமிட்ட நபர்களும் மற்றும் அமைப்புகளும் பௌத்த மதத்தின் மேன்மையை சீர்குலைக்கும் வகையில் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன. இவற்றில் அண்மையில் பௌத்த போதனையாளர் என்று கூறிக்கொண்டு நபரொருவர் செயற்பட்டு, அவர் வாழ்க்கை தொடர்பில் போலியான பிரசாரங்களை முன்னெடுத்து மக்களை தவறான முறையில் வழி நடத்தியதுடன், தற்கொலைக்கு மக்களை தூண்டியுள்ளதாக குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் சில நபர்களும் பௌத்தம் தொடர்பில் போலியான கருத்துக்களை மக்களிடையே பரப்பியுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பௌத்தத்தை சீரழிக்க முயற்சிக்கும் இவ்வாறான நபர்களின் செயற்பாடுகளை சாதாரண விடயமாக பார்க்க முடியாது. இதனால் இந்த நபர்கள் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்தி பௌத்தத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ன்று மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியை கேட்டுக்கொண்டுள்ளனர்.

