எந்தச் சட்டத் திருத்தங்களாலும் சமாதானத்தை ஏற்படுத்த முடியாது

எந்தச் சட்டத் திருத்தங்களாலும் சமாதானத்தை ஏற்படுத்த முடியாது

சிங்கள, பௌத்த மேலாதிக்க எண்ணம், இனவிரோத செயற்பாடுகள் தீர்வுக்கு வராத வரையில் என்ன சட்டத் திருத்தங்களை கொண்டு வந்தாலும் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நீதிமன்ற நியாயசபை மற்றும் நிறுவனங்களை அவமதித்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதன்போது சிறீதரன் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கொழுக்கட்டையும் மோதகமும் ஒன்றுதான் வடிவங்கள் வேறாக இருந்தாலும் இரண்டுக்குள்ளும் உள்ளே இருப்பது ஒரே பொருட்களே. இதேபோன்றுதான் ஏற்கனவே இருந்த பயங்கரவாத தடைச் சட்டமும் தற்போதைய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் ஒன்றுதான். இந்த நாட்டின் மக்களை இது பாதிக்கச் செய்யப் போகின்றது என்பதனையே இந்த சட்டமூலம் காட்டுகின்றது.

1978 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம் 44 வருடங்களை நெருங்கியுள்ளது. இந்தச் நாட்டில் பல்வேறுபட்ட இளைஞர் யுவதிகள் கொல்லப்பட்டுள்ளனர். மூன்று இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டும் காணாமல் போகவும் செய்யப்பட்டுள்ளனர். 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகள் இந்த மண்ணில் இருந்து துடைத்தெரியப்பட்டுள்ளனர். ஜே.வி.பி. போராளிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கையின் வரலாறு, இந்தச் சட்டம் எவ்வாறு கொடூரமானது என்பதனை காட்டியுள்ளது.

இதேவேளை அரகலய போராட்டம் இந்த அரசாங்கத்திற்கு பெரும் அழுத்தங்களை கொடுத்துள்ளது. ஜனநாயக வழியிலான போராட்டத்தை அடக்குவதற்கு இந்த சட்டமூலம் ஊடாக திட்டமிடப்படுகின்றது. இலங்கை போதைப் பொருளில் மூழ்கிபோயுள்ளது. இதற்கு சட்டங்களை கொண்டு வந்து அதனை தடுப்பதற்கு முடியாதுள்ளது. நீங்கள் கொண்டுவந்துள்ள இந்த சட்டம் மக்களுக்கு திருப்தியளிப்பதாக இல்லை.

இந்த நாட்டில் இனவழிப்பு மற்றும் பல்வேறுபட்ட போர்க்குற்றங்களை தமிழர்கள் சந்தித்துள்ளனர். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கும், சரணடைந்தவர்களுக்கும் கைது செய்யப்பட்டவர்களுக்கும் இன்னும் நீதி கிடைக்கவில்லை. இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் ஒப்படைக்கப்பட்ட சாட்சியங்கள் இருந்தும் அவர்கள் காணமல் போயுள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. வவுனியா மாவட்ட காணாமல்போனோர் சங்கத்தின் தலைவி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். எந்தச் சட்டம் தனது பிள்ளைகள், கணவன் மீது பாய்ந்ததோ அந்த சட்டம் இப்போது குடும்ப உறுப்பினர்களுக்கும் பாய்கின்றது. பயங்கரவாத தடைச் சட்டத்தால் எந்தளவுக்கு நாடு சீரழிந்துள்ளது. இந்த நாடு இன்னும் திருந்துவதாக இல்லை. சிங்களத் தலைவர்கள் ஏன் இன்னும் மனிதாபிமான ரீதியில் சிந்திப்பதில்லை.

இன்னும் உங்களிடம் குரோதம் உள்ளது. சிங்கள, பௌத்த மேலாதிக்க எண்ணம், இனவிரோத செயற்பாடுகள் தீர்வுக்கும் வராத வரையில் என்ன சட்டதிருத்தங்களை கொண்டு வந்தாலும் இந்த நாட்டில் உள்ள பல்லின மக்களை ஒன்றுசேர்க்க முடியுமா? யுத்தம் முடிந்தும் இன்னும் சமாதானத்தை உங்களால் அடைய முடியவில்லை. சமாதானத்திற்கு செல்ல இன்னும் நீண்ட தூரம் உள்ளது. அதில் ஒரு குறுகிய பகுதியையேனும் எட்டிப்பிடிப்பதற்கு நாட்டின் தலைவர்களுக்கோ, ஜனாதிபதிக்கோ இன்னும் சிந்தனை வரவில்லை. தயவு செய்து எண்ணங்கள், சிந்தனைகளை மாற்றுங்கள் என்று கோருகின்றோம்.

இந்த சட்டங்கள் சிங்கள பௌத்தத்தையும் சிங்கள இன செயற்பாடுகளையும் மேலோங்கி கொண்டு செல்கின்ற சட்டமாக இருக்கின்றதே தவிர இங்குள்ள பல்லின மக்களை அணைத்துச் செல்லும் சட்டமாக இல்லை என்பதனையே நாட்டின் கடந்த கால வரலாறுகள் கூறுகின்றன.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நியாயமானதா? சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கான யுக்தியே. தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் உங்களிடம் இல்லை. மட்டக்களப்பு மயிலத்தமடு விவகாரத்தில் ஜனாதிபதியினால் பண்ணையாளர்களுக்கு நீதியான தீர்வை வழங்க முடியவில்லையே. வடக்கு, கிழக்கில் 72க்கும் மேற்பட்ட பெளத்த விகாரைகள் சிங்கள, பௌத்த மக்கள் இல்லாத இடங்களில் அமைக்கப்படுகின்றன. இந்த சட்டங்கள் என்ன செய்கின்றன. அவை சிங்கள மக்களையும் சிங்கள அரச இயந்திரத்தை பாதுகாப்பதற்காகவா செய்யப்படுகின்றன. இந்த சட்ட திருத்தங்கள் மக்களின் ஆன்மாக்களை வாழ விடுமா? இந்த நாட்டின் நீதியை சட்டத்தால் கொண்டு வர முடியாது. மனது, எண்ணங்களை மாற்றுங்கள். இல்லாவிட்டால் என்ன சட்டத்தை கொண்டுவந்தாலும் அது இன்னுமொரு இனத்தை அழிப்பதற்கே ஆகும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )