
கோத்தாவின் வீழ்ச்சிக்கு பஸிலே முக்கிய காரணம்
கோத்தாபய ராஜபக்ஷ ஆட்சியின் வீழ்ச்சிக்கு அவரின் சகோதரரான பஸில் ராஜபக்ஷவே காரணம் என்றும், கோத்தாபயவை வெளியேற்றி தான் ஜனாதிபதியாவதற்கான சூழ்ச்சிகளில் பஸில் ஈடுபட்டிருந்தார் என்றும் மவ்பிம ஜனதா கட்சி தலைவர் திலிப் ஜயவீர தெரிவித்துள்ளார்.
இணையத்தள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலொன்றிலேயே திலீப் ஜயவீர இதனை தெரிவித்துள்ளார்.
அந்த நேர்காணலில் அவர் தெரிவித்துள்ளதாவது,
கோத்தாபய ராஜபக்ஷவை வழிநடத்தியவர்கள் அவர் நம்பிக்கை கொள்ளும் கொள்கையை பின்பற்றுவர்கள் அல்ல. குறிப்பாக 20ஆவது திருத்தத்தை கொண்டு வராமல் இருப்பதற்கே கோத்தாபய ராஜபக்ஷ எதிர்பார்த்தார். ஆனால் பஸில் ராஜபக்ஷ அழுத்தம் கொடுத்து, தனது உள் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அந்த திருத்தத்தை கொண்டு வரச் செய்தார்.
இறுதியில் பஸில் ராஜபக்ஷவினால் நிர்க்கதியானவராக கோத்தாபய ராஜபக்ஷ மாறும் நிலைமை ஏற்பட்டது. அதற்கு அப்பால் அரசியல் செய்ய முடியாத நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தனது சகோதரரை அந்தப் பதவியில் தொடர்ந்தும் வைத்திருப்பதற்கு பஸில் ராஜபக்ஷ எதிர்பார்க்கவில்லை. நானும் அதனை அறிந்திருந்தேன். அதனை கோத்தாபயவும் அறிந்திருப்பார்.
கோத்தாபய பதவிக்கு வந்த நாள் முதல் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அதில் முதலாவது சூழ்ச்சியாக 20ஆவது திருத்தத்தை குறிப்பிடலாம். பஸில் ராஜபக்ஷ இதனைப் பயன்படுத்தி பாராளுமன்றம் வரமாட்டார் என்று ஆரம்பத்தில் கூறினாலும் அவர் பாராளுமன்றம் வருவதற்காகவே அதனைச் செய்தார்.
ரணில் விக்கிரமசிங்க தற்போது எப்படி ஜனாதிபதியாக வந்தாரோ அப்படியே தானும் ஜனாதிபதியாவதற்கு பஸில் ராஜபக்ஷ திட்டமிட்டிருந்தார். அவர் அப்போதைய நிதி அமைச்சராக இருந்தார். ஜனாதிபதியின் சகோதரராக அதிகாரங்களை கொண்டிருந்தார். அப்போதுதான் நாட்டில் எரிபொருள், எரிவாயு நெருக்கடிகள் ஏற்பட்டன. அவர் நிதி அமைச்சர் என்ற ரீதியில் அதனை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அதனை செய்யவில்லை. உள்நோக்கங்களுடனேயே அவ்வாறு நடந்துகொண்டார். இறுதியில் பஸிலின் முயற்சிகள் தேல்வியடைந்து ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதியாகியுள்ளார் எனவும் தெரிவித்தார்.

