
ரணிலே வேட்பாளர் அவருக்கே ஆதரவு
ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவாரெனவும் தனது ஆதரவு அவருக்கே எனவும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராகப் பலர் போட்டியிடலாம், ஆனால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய தலைவராக ரணில் விக்கிரமசிங்கவே உள்ளார்.
நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கிய நிலையில் முன்னாள் ஜனாதிபதி நாட்டை விட்டு சென்ற நேரம் நாட்டை பொறுப்பெடுக்க யாரும் தயாராக இருக்காத நிலையில் நாட்டை ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றார்.
அவர் நாட்டை பொறுப்பெடுத்த காரணத்தினால், மக்கள் பொருட்களுக்காக வரிசையில் நிற்கும் நிலையை இல்லாமல் செய்தார்.
அது மட்டுமல்லாது சர்வதேச ரீதியில் இலங்கை உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு இராஜதந்திர மட்டத்தினை கையாளக்கூடிய பக்குவம் ரணில் விக்கிரமசிங்கவிடம் உள்ளது.
எதிர்வரும் மாதம் நான்காம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்குக்கான விஜயத்தினை மேற்கொள்ள உள்ள நிலையில் சக தமிழ் கட்சிகள் ஜனாதிபதியின் வருகையை சாதகமாக பயன்படுத்தி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று கொடுக்க முயற்சிக்க வேண்டும்.
கடந்த வாரமும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சக தமிழ் கட்சிகளை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து பல விடயங்கள் தொடர்பில் சாதகமாக கலந்துரையாடியுள்ளார்.
ஜனாதிபதியின் நல்லெண்ண தீர்மானங்களுக்கு சக தமிழ் கட்சிகளும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்களாயின் பல்வேறு பிரச்சினைகளை இலகுவாகத் தீர்த்துக் கொள்ள முடியும்.
இந்திய கடற் தொழிலாளர்களின் அத்துமீறிய வருகையால் வடபகுதி மீனவர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுவரும் நிலையில் எமது மக்களின் பிரச்சினை தொடர்பில் தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு தெளிவுபடுத்த வருமாறு சக தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தேன்.
ஏனெனில் இந்திய மீனவர்களை கைது செய்யும்போது அது சிங்கள கடற்படை கைது செய்வதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக நமது நிலைப்பாட்டை தமிழ்நாட்டுக்குத் தெரியப்படுத்துவதற்கு சக தமிழ் கட்சிகளில் பெரும்பாலானோர் இணங்கியுள்ளனர்.
ஆகவே ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பலர் பலவிதமாக பேசலாம், ஆனால் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த நிலையத்தில் உள்ள நாட்டைக் கட்டி எழுப்ப வேண்டுமானால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மட்டுமே முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

