
மைத்திரிபால உட்பட 10 எம்.பி.க்கள் தம்மிக்க சந்திப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேராவுடன் 10 பேர் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு அண்மையில் இரகசிய கலந்துரையாடலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு பின்னர் சுயேச்சை பாராளுமன்ற உறுப்பினர்களாக செயற்படுவதாக அறிவித்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
தமது அரசியல் எதிர்காலம் குறித்து தம்மிக்க பெரேராவுடன் கலந்துரையாடிய போதிலும், கலந்துரையாடலின் பெரும்பாலான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தம்மிக்க பெரேரா என அரசியல் ரீதியில் பேசப்படுகின்ற போதிலும், அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பெயர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

