
போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பில் முன்கூட்டியே அறிவித்துவிட்டு தேடுதல் நடவடிக்கையா?
நாட்டில் முன்னெடுக்கப்படும் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் முன்கூட்டியே அறிவித்தமை குறித்து சில சந்தேகங்கள் எழுவதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே ஓமல்பே சோபித தேரர் இவ்வாறு கூறியுள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக சிறந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். இது வரவேற்கத்தக்கது. எனினும் இதில் சந்தேகங்கள் உள்ளது. இந்த நடவடிக்கையை ஆரம்பிக்க முன்னரே இந்த நடவடிக்கையை முன்னெடுக்கப் போவதாக கூறியுள்ளனர். யுத்தத்தின் போது எதிரிகளுக்கு கூறிவிட்டா தாக்குதல்களை நடத்துவர். அப்படி செய்தால் அந்த யுத்தம் வெற்றிபெறுமா?
இதேபோன்று போதைப் பொருள் எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பிக்க முன்னர் அறிவித்துவிட்டு செய்கின்றனர். அப்படி செய்தால் போதைப் பொருளுடன் தொடர்புடைய சிறிய வியாபாரிகளே சிக்குவர். பெரிய வியாபாரிகள் தப்பிக்கொள்வர். நியாயமான நடவடிக்கை வெற்றியுடன் நிறைவடைய வேண்டுமாயின் சின்னச் சின்ன வியாபாரிகளையும், போதைப் பொருள் பயன்படுத்துபவர்களையும் பிடிக்க முன்னர் இதனுடன் தொடர்புடைய அரசியலுடன் தொடர்புடைய மற்றும் பெரிய போதைப் பொருள் வியாபாரிகளை கைது செய்ய வேண்டும் என்றார்.

