உக்ரேன் போரில் கூலிப் படைகளாக இலங்கையின் முன்னாள் இராணுவத்தினர் 70 பேர் பங்கேற்பு ; கப்டன் உட்பட மூவர் உயிரிழப்பு

உக்ரேன் போரில் கூலிப் படைகளாக இலங்கையின் முன்னாள் இராணுவத்தினர் 70 பேர் பங்கேற்பு ; கப்டன் உட்பட மூவர் உயிரிழப்பு

ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்குமிடையிலான போரில், இலங்கை இராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் வீரர்கள் 70 பேர் கூலிப் படைகளாக உக்ரேன் படையினருடன் இணைந்து ரஷ்ய படையினருக்கு எதிராகப் போரிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உக்ரேன் படையில் பணியாற்றிய நிலையில் ரஷ்ய பீரங்கி தாக்குதலில் போர்க்களத்தில் உயிரிழந்த மூன்று முன்னாள் இலங்கைய படையினரில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உக்ரேனின் பாதுகாப்புக்கான சர்வதேச படையணியின் (Ukrainian Foreign Legion) அதிகாரி ஒருவர் இதனை உறுதிசெய்துள்ளார்.

இதன்படி, இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரியான கப்டன் ரனிஷ் ஹேவகேவின் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

உக்ரேனிய வெளிநாட்டுப் படையில் தன்னார்வத் தொண்டராகச் சேர்ந்த ஹேவகே, அதன் முதல் சிறப்புப் படையின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றினார்.

இதேவேளை, உக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதல்களில் மேலும் இரு இலங்கை படையினரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அவர்களின் சடலம் இதுவரை மீட்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கப்டன் ரனிஷ் ஹேவகேவின் இறுதிச் சடங்குகளை முழு இராணுவ மரியாதையுடன் செய்ய உக்ரேன் அரசு தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹேவகே போர்க்களத்தில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக அதன் முதல் சிறப்புப் படையின் கட்டளை அதிகாரியாக உக்ரேன் ஜனாதிபதி பதவி உயர்வு வழங்கியிருந்தார்.

உக்ரேனிய வெளிநாட்டு படையணி என்பது ரஷ்ய படையெடுப்பிற்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் வேண்டுகோளின் உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.எனினும் இதுவொரு கூலிப் படையாகும்.

2022ஆம் ஆண்டு பெப்ரவரியில் உருவாக்கப்பட்ட இப்படைப்பிரிவு, உக்ரேனின் தரைப்படைகளின் வெளிநாட்டு இராணுவப் பிரிவாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )