சீனாவைக் கைவிடுங்கள் இந்தியாவுடன் கைகோருங்கள்

சீனாவைக் கைவிடுங்கள் இந்தியாவுடன் கைகோருங்கள்

சீனாவின் கப்பல் இலங்கைக்குள் வந்து என்ன ஆராய்ச்சி செய்கின்றது?கடலை ஆளப்படுத்தப் போகின்றார்களா அல்லது மீன் வகைகளை கண்டுபிடிக்கப் போகின்றார்களா? சீனாவைப் பொறுத்தவரையில் தன்னுடைய தேவை அது நிலமாக இருக்கலாம் கடலாக இருக்கலாம் . அது தன்னுடைய அதிகாரத்திற்குள் இருக்க வேண்டுமென நினைக்கும் நாடு. எனவே இந்த விடயத்தில் இந்தியா தனது பாதுகாப்பு தொடர்பில் எழுப்பும் கேள்வி நியாயமானது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செலவுத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

கடவுச்சீட்டுக்கள் பெறுவதில் பெரும் தாமதம் ஏற்படுகின்றது.பலரும் விண்ணப்பித்து விட்டு காத்.திருக்கின்றனர் எனவே அதனை துரிதமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை விட முக்கியமான விடயமாக வெளிநாட்டில் இறக்கும் எமது உறவுகளின் உடல்களை நாட்டுக்கு கொண்டு வருவதில் பெரும் காலதாமதம் ஏற்படுகின்றது . இதுதொடர்பிலும் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை -இந்திய ஒப்பந்தம் தொடர்பில் என்னிடம் சில கேள்விகள் உள்ளன. இந்த ஒப்பந்தத்தில் அடிப்படையிலான மாகாண சபைகள் தற்போது செயலிழந்துள்ளன. அவற்றுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளிநாட்டு அமைச்சு எந்தளவில் அக்கறை கொண்டுள்ளது?.இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துகின்ற செயற்பாடுகளை எடுத்துள்ளதா ?

அடுத்ததாக எமது கடற்பரப்பினுள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் தொடர்பில் நாம் கடற்தொழில் அமைச்சை மட்டும் குறை கூறமுடியாது. இலங்கை-இந்திய மீனவர் பிரச்சினை காலம் காலமாக நீடிக்கின்றது.இந்தப்பிரச்சினைக்கு தீர்வு காண வெளிநாட்டு அமைச்சுக்கும் பொறுப்புண்டு.அவ்வாறான தீர்வு முயற்சியில் நீங்கள் ஈடுபட்டால் நாம் உங்களுக்கு முழுமையான ஆதரவு தருவோம்.

எந்த நாட்டுக்கும் அடி பணிய மாட்டோம் என உங்கள் உரையில் கூறினீர்கள். இந்தியா எமது அயல் நாடு.எமக்கு நெருக்கடிகள் ஏற்படும் போதெல்லாம் இந்தியாவே முதலில் உதவியது. ஆனால் இப்போது பார்த்தால் சீனாவின் கப்பல் வருகை என்பது ஏன் என்பதே தெரியாமல் உள்ளது. அயல் நாடான இந்தியா தனது பாதுகாப்பு சம்பந்தமாக இலங்கையிடம் கேள்வி எழுப்புவது நியாயமான விடயம். ஆகவே ஏன் அந்த சர்ச்சைக்குள் நீங்கள் செல்ல வேண்டும்?

சீனாவின் கப்பல் இலங்கைக்குள்வந்து என்ன ஆராய்ச்சி செய்கின்றது?கடலை ஆளப்படுத்தப் போகின்றார்களா அல்லது மீன் வகைகளை கண்டுபிடிக்கப் யோகின்றார்களா? சீனாவைப் பொறுத்தவரையில் தன்னுடைய தேவை அது நிலமாக இருக்கலாம் கடலாக இருக்கலாம் . அது தன்னுடைய அதிகாரத்திற்குள் இருக்க வேண்டுமென நினைக்கும் நாடு. இதனை வரலாற்று ரீதியாக நாம் எல்லா இடத்திலும் பார்க்க முடியும்.

இறையாண்மை எமக்கு முக்கியம்தான். ஆனால் நாம் கடமைப்பட்டவர்களாக இருப்பதனால் எமது கொள்கையில் சில தளர்வுகளை செய்யத்தான் வேண்டும்.ஆகவே இந்த விடயத்தில் இந்தியாவோடு உங்கள் கரங்களை கோர்க்க வேண்டும்.

இதே நேரம் வெளிநாடுகளிலுள்ள சில அமைப்புக்கள் இலங்கையால் தடை செய்யப்பட்டுள்ளன. நான் கூட தனி நாடு கோரி துப்பாக்கி தூக்கி சண்டையிட்டவன். ஆனால் இன்று அந்த நிலைமை இல்லை. எனவே இவ்வாறு தடை செய்ப்பட்ட அமைப்புகளின் தடைகளை நீக்க அந்த அமைப்புக்கள் தொடர்பில் நன்றாக ஆராய்ந்து முடிவுகளை எடுக்க வேண்டும்.

நாம் பொருளாதார நெருக்கடியில் இருக்கின்ற போது வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர் அமைப்புக்கள் இங்கு முதலீடுகளை செய்கின்றபோது தடைகள் தடையாக அமைக்கின்றன. அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டமும் தடைகளை ஏற்படுத்துகின்றது. எனவே இந்தத் தடைகளை நீக்க முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )