
ராஜபக்ஸ குடும்பங்கள் பதுக்கிய நிதி எங்கே ?
முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ தேர்தல் வாக்குகளுக்காக இஸ்லாமிய நாடுகளை பகைத்துக் கொண்டதனால் ஜெனிவா கூட்டத்தொடரில் இஸ்லாமிய நாடுகள் இலங்கைக்கு சார்பாக வாக்களிக்கவில்லை.தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அவ்வாறே செயற்படுகிறார்.ஜெனிவாவுக்கு ஒன்றை கூறுகின்றார் ,நாட்டில் பிறிதொன்று செயற்படுத்தப்படுகிறது. சர்வதேச சமூகம் முட்டாள்கள் அல்ல என்பதை விளங்கிக்கொள்ள வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான நிரோஷான் பெரேரா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செலவுத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் சாலிய விக்கிரமசூரிய மீது 3 இலட்சத்து 3227 அமெரிக்க டொலர் நிதி மோசடி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு அவருக்கு அமெரிக்காவின் வாஷிங்டன் நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.இவரை பாதுகாப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ அரசாங்கம் இராஜாதந்திர மட்டத்தில் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியடைந்தன.ஆனால் அவருக்கு எதிராக இலங்கையில் முறையாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இலங்கையின் அரச தலைவர்கள் மோசடி செய்த நிதி சாலிய விக்கிரமசூரிய ஊடாக வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள விவகாரம் தொடர்பில் அமெரிக்காவில் எப்.பி.ஐ.நடவடிக்கை எடுத்த போதும் அதற்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்காத காரணத்தால் அந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
அதேபோல் ராஜபக்ஸக்களின் குடும்ப உறவினரின் நிதி மோசடி தொடர்பில் பன்டோரா வெளியிட்ட அறிக்கை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ விசாரணைகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டுக் கொண்டு விசேட குழுவை நியமித்தார்.மோசடி செய்யப்பட்டு லண்டன்,அவுஸ்திரேலியா,டுபாய் ஆகிய நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நிதிக்கு நேர்ந்தது என்ன? இந்த கேள்விகளுக்கு வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரியிடம் பதில் எதிர்பார்க்க முடியாது.ஏனெனில் அவர் தான் ராஜபக்ஸக்களின் சட்டத்தரணியாக பல வழக்குகளில் முன்னிலையானார்.
அதேபோல் மிக் விமான கொள்வனவில் 6.8 மில்லியன் டொலர் நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்குள்ளாக்கப்பட்ட உதய வீரதுங்கவை ராஜபக்ஸக்கள் ரஷ்யாவுக்கான தூதுவராக நியமித்தார்கள்.இவர் மீது நிதி மோசடியுடன் தற்போது ஆயுத வியாபார குற்றச்சாட்டும் உக்ரைனில் முன்வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு நிதி மோசடியுடன் தொடர்புடையவர்களை வெளிநாட்டு தூதுவர்களாக நியமித்ததால் இன்று இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்தன அண்மையில் இந்தியாவின் தந்தி தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில், ‘ வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிப் பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ எனக் குறிப்பிட்டதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்திய மீனவர்கள் சட்டவிரோதமான இயந்திரங்களை கொண்டு மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.எமது நாட்டின் வடக்கு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட அவர்களுக்கு அனுமதி வழங்கினால் நாட்டின் மீன்வளம் முழுமையாக இல்லாதொழியும்.இலங்கைக்கு கச்சதீவை வழங்கியது தவறு என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளார். ஆகவே மீன்பிடி விவகாரத்தில் இந்த அரசாங்கம் இந்தியாவின் கட்டளைகளுக்கு அமைய செயற்படுவது சந்தேகத்துக்குரியது. ஆகவே இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றார்.

