
பிற மதங்களை நிந்தித்த குற்றச் சாட்டில் போதகர் ஜெரோமுக்கு ஒரு சட்டம் சுமணரத்தின தேரருக்கு ஒரு சட்டமா?
பிற மதங்களை நிந்தித்த குற்றச் சாட்டில் ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்துக்கு அமைய மத போதகர் ஜெரோம் பெர்னான்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.ஆனால் தமிழர்களை துண்டு துண்டாக வெட்டிக் கொல்வேன் என்று பகிரங்கமாக எச்சரித்த பௌத்த பிக்குவுக்கு எதிராக இதுவரை எவ்வித நடவடிக்கைகளும்ஏன் எடுக்கப்படவில்லை.இந்த நாட்டில் ஐ.சி.சி.பி.ஆர் சட்டம் ஒரு இனத்தை மாத்திரம் இலக்காகக் கொண்டுள்ளதுஎன தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான இரா.சாணக்கியன் குற்றம்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கைத்தொழில் மற்றும் வர்த்தக,உணவு பாதுகாப்பு அமைச்சுகளுக்கான செலவீனத் தலைப்புகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு குற்றம்சாட்டிய அவர் மேலும் பேசுகையில்,
பிற மதங்களை நிந்தித்த குற்றச் சாட்டில் மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.இவர் குறிப்பிட்ட விடயத்தை நான் நியாயப்படுத்தவில்லை.அவர் தொடர்பில் நீதிமன்றம் தீர்மானம் எடுக்கும்.ஆனால் இந்த நாட்டில் ஐ.சி.சி.பி.ஆர்.சட்டம் ஒரு இனத்தை மாத்திரம் இலக்காக கொண்டு செயற்படுவது வன்மையான கண்டிக்கத்தக்கது.
தமிழர்களை துண்டுத் துண்டாக வெட்டிக் கொல்வேன் என்று பகிரங்கமாக எச்சரித்த பௌத்த பிக்குவிற்கு(சுமணரத்தின தேரர்) எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபர்,பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரிடம் வலியுறுத்தினோம்.ஆனால் இதுவரை அவருக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை .எனவேதான் இந்த நாட்டில் ஐ.சி.சி.பி.ஆர் சட்டம் ஒரு இனத்தை மாத்திரம் இலக்காகக் கொண்டுள்ளது எனக் கூறுகின்றேன்
இதேவேளை நுகர்வோர் அதிகார சபை அரசியல் அதிகார சபையாக செயற்படுகிறது.மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது கட்சியுடன் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடும் தரப்பினரை இலக்காக கொண்டு நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் செயற்படுகிறார்கள்.தமக்கான பொறுப்பை விட்டு விட்டு, அரசியல் செய்வதால் இன்று நுகர்வோர் பாதிக்கப்படுகின்றனர் என்றார்.

