போதகர் ஜெரோம் சி.ஐ.டி.யால் கைது

போதகர் ஜெரோம் சி.ஐ.டி.யால் கைது

பௌத்தம், இஸ்லாம் மற்றும் இந்து மதம் தொடர்பாக இழிவான கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோ வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்(சி.ஐ.டி.)கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை வாக்குமூலம் அளிப்பதற்காக திணைக்களத்திற்கு வந்த போதே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மத பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பான விசாரணையின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இதேவேளை போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிரான பயணத்தடையை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோட்டை நீதவான் நீதிமன்றில் பெற்றுக்கொண்டிருந்த நிலையிலும் மே 14, 2023 ஞாயிற்றுக்கிழமை அவர் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.

அதன் பின்னர் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இலங்கை வந்தவுடன் விமான நிலையத்திலோ அல்லது வேறு இடத்திலோ கைது செய்ய வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

எனினும் நாட்டுக்கு வந்த பின்னர் 48 மணித்தியாலங்களுக்குள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்க வேண்டும் என நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பின்னர், குறித்த போதகருக்கு எதிராக வழமையான சட்ட நடைமுறைகளை பின்பற்றுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை நாட்டுக்கு வந்த அவர், வியாழக்கிழமை முதலாவது வாக்கு மூலத்தை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வழங்கியிருந்தார். இரண்டாவது தடவையாக வெள்ளிக்கிழமை வாக்குமூலம் வழங்க சென்றபோது அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )