அமைச்சராக இருந்த ரொஷான் ரணசிங்கவின் பாராளுமன்ற உரைக்கு எதிராக வழக்குத் தாக்கலா?

அமைச்சராக இருந்த ரொஷான் ரணசிங்கவின் பாராளுமன்ற உரைக்கு எதிராக வழக்குத் தாக்கலா?

விளையாட்டுத் துறை அமைச்சராக ரொஷான் ரணசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்த விடயமொன்று தொடர்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது பாராளுமன்ற சிறப்புரிமையை மீறுகின்ற விடயம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியபோது பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்படும் கருத்தை அடிப்படையாகக்கொண்டு வழக்கு தொடுக்க முடியாது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பதிலளித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,

பாராளுமன்ற அதிகாரங்களும் சிறப்புரிமைகளும் சட்டத்தின் முதலாம் பிரிவில் 3 மற்றும் 4 இன் கீழ் பாராளுமன்றத்தில் பேசப்படும் விடயம் தொடர்பாக பாராளுமன்றத்துக்கு வெளியில் எந்த விசாரணையும் மேற்கொளள முடியாது. அதேநேரம் அதனை அடிப்படையாகக்கொண்டு குடியியல் மற்றும் குற்றவியல் வழக்கு நடவடிக்கைகளுக்கு,அல்லது கைது செய்யப்படுவதற்கு அல்லது சிறைப்படுத்துவதற்கும் முடியாது.

இவ்வாறான நிலையில் பாராளுமன்ற அதிகாரங்களும் சிறப்புரிமைகளும் சட்டத்தை முற்றாக மீறி, விளையாட்டுத்துறை அமைச்சராக ரொஷான் ரணசிங்க இந்த சபையில் தெரிவித்த கருத்தொன்றை அடிப்படையாக்கொண்டு ஒரு சிலரால் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த சட்டத்தின் கீழ் ரொஷான் ரணசிங்கவின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை பாதுகாக்க கடமைப்பட்டுள்ள சபாநாயகர் இது தொடர்பாக மேற்கொள்ளப்போகும் நடவடிக்கை என்ன எனக் கேள்வி எழுப்பினார். .

இதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பதிலளிக்கையில்,

பாராளுமன்ற அதிகாரங்களும் சிறப்புரிமைகளும் சட்டத்தின் பிரகாரம் பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்படும் கருத்தை அடிப்படையாகக்கொண்டு வழக்கு தொடுக்க முடியாது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. அது தொடர்பில் கவனம் செலுத்துவேன். என்றார்.

இதன்போது எழுந்த எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. , பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்தை அடிப்படையாகக்கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக யாராவது வழக்கு தொடுத்தால், குறித்த நபரை பாராளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு அழைக்கும் அதிகாரம் உங்களுக்கு இருக்கிறது. எனவே நீங்கள் அதனை செய்ய வேண்டும் என்றார்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )