மாவீரர் தின நிகழ்வுகளைக் குழப்ப படைத் தரப்பின் குழுக்கள்

மாவீரர் தின நிகழ்வுகளைக் குழப்ப படைத் தரப்பின் குழுக்கள்

இராணுவப் புலனாய்வாளர்களினால் , பொலிஸ் புலனாய்வாளர்களினால் மாவீரர் தின நிகழ்வுகளை குழப்புவதற்கென்றே பல குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்தக்குழுக்கள் மோதல்கள் இருப்பது போன்று காட்டி மாவீரர் தின நிகழ்வுகளை குழப்புவதற்கு முழு முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாக குற்றம்சாட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யான எஸ்.ஸ்ரீதரன் தமிழர்கள் வாழும் இடங்களில் திணிக்கப்பட்டுள்ள அவர்களை படுகொலை செய்த இராணுவத்தின் சின்னங்கள் எவ்வாறு நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்? எனவும் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 2024 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் பேசுகையில்,

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் 4000 மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டுள்ளன. அவ்வாறான துயிலும் இல்லத்தில் உள்ள தூபிகள் அனைத்தும் இடித்து அகற்றப்பட்டுள்ளன.

வியாழக்கிழமை அங்கு விளக்கேற்றுவதற்கிருந்த சிறிய தூபி கூட பொலிஸாரினாலும் வளவள திணைக்களத்தினராலும் உடைத்தெறியப்பட்டுள்ளது. இது இந்த நாட்டிற்கு எவ்வளவு கேவலமான விடயம்.

எல்லாளனை போரில் வெற்றி கொண்ட துட்டகைமுனு மன்னன் எல்லாளனுக்கு நினைவுத் தூபி அமைத்து அதனை அனைவரும் வணங்க வேண்டுமென்று உத்தரவிட்ட பண்பாட்டை, உயரிய எண்ணங்களை கொண்ட சிங்கள மன்னர்கள் இருந்த நாட்டில் இப்போது எவ்வளவு மோசமான , கேவலமான வேலைகளில் ஈடுபடுகின்றீர்கள்.

தரவை மாவீரர் துயிலும் இல்லத்தை ஏன் பொலிஸார் வக்கிர எண்ணத்தில் உடைத்தார்கள். மாவீரர் துயிலும் இல்ல முகப்பு வாசல்களில் என்ன நல்லிணக்க சிதைவு உள்ளது? இதனால் இலங்கையில் நல்லிணக்கத்திற்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது?முல்லைத்தீவின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவ துப்பாக்கியோடும் இராணுவ சீருடையோடும் சிங்கக்கொடியோடும் இருக்கின்ற இராணுவ சின்னம் எவ்வாறு நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்?

அதேபோன்று ஆனையிறவில் உள்ள , கிளிநொச்சியில் உள்ள இன்னும் பல இடங்களில் உள்ள இராணுவ நினைவுச் சின்னங்களைப் பாருங்கள். இவற்றையெல்லாம் போரில் அழிந்த தமிழ் மக்கள் பொறுமையோடும் சகித்துக்கொண்டும் தானே வாழ்கின்றார்கள். ஆனால் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தை பொலிஸார் இனவெறியோடு உடைத்தெறிந்துள்ளார்கள். இது இந்த நாட்டுக்கு கேவலமாக இல்லையா? எத்தனை சிங்களத்தலைவர்கள் நீங்கள் ஆடையோடு இருக்கின்றீர்கள்?

இராணுவ சின்னங்களை திணிக்கின்றீர்கள்.தமிழர்கள் வாழும் இடங்களில் அவர்களை படுகொலை செய்த சின்னங்கள் முதன்மைப்படுத்தப்படுகின்றன . ஆனால் தமிழ் மக்கள் தமது பிள்ளைகளுக்காக , கணவனுக்காக, சகோதரனுக்காக அமைக்கும் சிறு வளைவைக் கூட பொலிஸார் உடைத்தெறிகின்றார்கள். இந்த அதிகாரத்தை அவர்களுக்கு யார் கொடுத்தது?

நீதிமன்றங்கள் கூட அஞ்சலி நிகழ்வுகளை தடை செய்யவில்லை. இறந்தவர்களை வணங்கலாம் எனக்கூறுகின்றன. ஆனால் பொலிஸார் மிக மோசமாக நடக்கின்றனர். இராணுவ புலனாய்வாளர்களினால் , பொலிஸ் புலனாய்வாளர்களினால் மாவீரர் தின நிகழ்வுகளை குழப்புவதற்கென்றே பல குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்தக்குழுக்கள் மோதல்கள் இருப்பது போன்று காட்டி மாவீரர் தின நிகழ்வுகளை குழப்புவதற்கு முழு முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளன.

இங்கு ஜனாதிபதி பேசும்போது வடக்கிற்கு தீர்வு வழங்கி அபிவிருத்தி செய்வோம் என்கின்றார். அவர் கிழக்கிலிருந்து வடக்கை பிரித்தே எப்போதும் பேசுகின்றார். வடக்கு,கிழக்கு என்பது தமிழர்களின் வரலாற்று தாய்வழி மண் அந்த வகையில் தமிழ் மக்கள் வாழக்கூடிய அதிகாரப்பகிர்வுடனான தீர்வை முன்வைக்கும் போதுதான் நீங்கள் நினைக்கும் பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )