
பிரபாகரனின் மகள் பேசினால் உள்நாட்டில் கலவரம் ஏற்படும்; மாவீரர் தின நிகழ்வுகளுக்கு தடை -மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பொலிஸார் உறுதியளிப்பு
வடக்கு கிழக்கில் நடைபெறவுள்ள மாவீரர் வைபவங்கள் தொடர்பில் பொதுச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் தேவையான சட்ட நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளனர்.
எதிர்வரும் நாட்களில் வடக்கு கிழக்கில் நடைபெறவுள்ள மாவீரர் வைபவங்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பயங்கரவாத விசாரணைப் பணியகத்தின் பணிப்பாளர் ஆகியோர் வெள்ளிக்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றில் வாக்குமூலமொன்றை வழங்கினர்.
அங்கு பொதுச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் தேவையான சட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.
இம்மாதம் 27 ஆம் திகதி முதல் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நடைபெறவுள்ள மாவீரர் வைபவங்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரி இராணுவத்தின் ஓய்வு பெற்ற புலனாய்வு அதிகாரியினால் சமர்ப்பிக்கப்பட்ட மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, பொலிஸ் மா அதிபர் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு பணியகத்தின் பணிப்பாளர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரசாங்க சட்டத்தரணி ஷமிந்த விக்கிரம இந்த உறுதிமொழியை வழங்கினார்.
மாவீரர் தின நிகழ்வை முன்னிட்டு செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட, வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகளின் குரலைப் பயன்படுத்தி இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக வடக்கு, கிழக்கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் உள்நாட்டுக் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எனவே இதனைத் தடுத்து நிறுத்த இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்குமாறு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.