
கடவுளே..!! கடசிப்பல நானாக…!
கடைசி பலி நானாக…
குளவிகளுக்கு இரையாகும்
மலையகத்தின் மாந்தருக்கு
சமர்ப்பணம் இக்கவிதை….
மரங்களின் இடுக்கில்
மறைந்து கிடக்கும்
மரண தூதுவனே….நீ
காவு கேட்பதற்கு
ஏவி விடப்பட்டவர்கள்
நாமல்ல…
சற்று நில்!
சரித்திரம் அறிந்து கொள்…!!
மலையகத்தின்
அவல நிலை தெரிந்துகொள்….!!
அடுப்பெரிக்கும் குச்சி போல
அனுதினம் வெந்து நின்னோ….
அட்டை கடி கடிக்கையில
இருக்கு இரத்தமு இழந்து நின்னோ….
கல்லு முள்ளு குத்தினாலு
காடு மேடு ஏறி வாரோ…
கம்பி கட்டுன செருப்புலதா
கன தூரோ நடந்து வாரோ…
கொட கம்பி அறுந்த போது
கொட்டு மழ துரத்தும் எம்ம
கூட முழுசா நெறஞ்ச போதும்
காசு கைய கடிக்கு எம்ம..
வெல வாசி ஏத்தத்துல
வெறு வயிரா காஞ்சி போறோ..
தேக் கொழுந்து ஆத்தாவத்தா
மல போல நம்பி வாரோ…
அப்பப்போ ஆச வரு
அறுசுவையா உணவுண்ண
ஆண்டி இவ பட்ட கடன்
அத எங்க பண்ண விடு…
கன்னி பொண்ண அனுப்பிடுனு
கடங்காரே பேச்சு சத்தோ..
கண்ண மூடு நேரமெல்லா
கருவரையே கலங்கி நிக்கு…
ஓட்ட வீட்ட சரி செய்ய
ஓட்டு போட்டு காத்திருந்தோ…
ஒரு பயபுள்ள பார்வ இன்றி
பல நாளா நனஞ்சிருக்கோ…
படுத்தெழும்பு பாய்க்குத்தான்
ஏ எலும்பு கூட்டின் நெற தெரியு..
பச்ச தண்ணி பானைக்குத்தா
ஏ வயிற்று பசி அது புரியு…
வக்கீலாக எம் புள்ள
வரத்தானே ஆசப்பட்டே….!
வருமானோ பத்தலனு
அவே கனவ நா தொலச்சே…..!
வயசான எம் பொண்ண
கர சேர்க்க காத்திருந்தே!
கட்டி வச்சி பார்க்குமுன்னே
முட்டி உடைக்க வச்சதென்ன…!!
என் கட்டுக்காவல் மீறிடுமோ
கலங்கமது நேர்ந்திடுமோ..
கடித்து போன உனக்கு தான்
கருணை அது இல்லையோ…!!
கத்தி கதறுகிறேன்
கடவுளை! காப்பாத்து என் சனத்த
குளவி பசிக்கு இரையான
கடைசி பலி நானாக…
-மாலினி