
இலங்கைக்கு 100 மில்லியன் டொலர் இழப்புஏற்படும்
அரசியல் மற்றும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கிடையிலான மோதல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் சபை இலங்கை கிரிக்கெட்டை தடைசெய்துள்ளது. இதனால் இலங்கைக்கு வருடாந்தம் 100 மில்லியன் டொலர் இழப்பு ஏற்படுகிறது. நான் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும்போது பிரச்சினைகளை கலந்துரையாடல் மூலம் தீர்க்க நடவடிக்கை எடுத்தேன் என சிறிலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ் தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட்டை தடைசெய்ய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எடுத்திருக்கும் தீர்மானம் தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை மற்றும் அரசியல்வாதிகளின் பிரச்சினைகளை கலந்துரையாடல் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இறுதியில் சிரமத்துக்கும் பாரபட்சமான நிலைக்கும் ஆளாகுவது வீரர்களாகும். நான் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் நிர்வாக பிரச்சினைகள் தலைதூக்கியபோது, வீர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு கலந்துரையாடல் மூலமே தீர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுத்தேன்.
அத்துடன் அரசியல் மற்றும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கிடையிலான மோதல் காரணமாகவே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இலங்கை கிரிக்கெட்டை தடைசெய்ய தீர்மானித்துள்ளது. இந்த தடை காரணமாக இலங்கைக்கு நேரடி மற்றும் மறைமுகமாக வருடாந்தம் சுமார் 100 மில்லியன் டொலர் வரை இல்லாமல் போகிறது. குறிப்பாக அரசாங்கத்தின் உள்ளக நிர்வாக பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள விளையாட்டை பயன்படுத்தக்கூடாது. குறுகிய அரசியல் நோக்கத்திற்காக விளையாட்டை பயன்படுத்துவதனால் அழிவடையப்போவது இலங்கை கிரிக்கெட்டும் கிரிக்கெட் வீரர்களுமாகும்.
கடந்த காலத்தில் ரக்பி, கால்பந்து நிர்வாகம் மற்றும் அரசியல்வாதிகளுக்கிடையில் மோதல் இடம்பெற்றது. இதன் மூலம் அந்த விளையாட்டுக்கள் தடை செய்யப்பட்டன. அதனால் அரசியல் மற்றும் விளையாட்டு நிர்வாகங்களுக்கிடையிலான மோதல்களின் மூலம் கடந்த காலங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை உணர்ந்து செயற்பட வேண்டும் என்றார்.

