’13’ பலவந்தமாகவே திணிக்கப்பட்டது; அதனை ஒருபோதும் முழுமையாக அமல்படுத்த முடியாது

’13’ பலவந்தமாகவே திணிக்கப்பட்டது; அதனை ஒருபோதும் முழுமையாக அமல்படுத்த முடியாது

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் இலங்கைக்கு பலவந்தமாக திணிக்கப்பட்ட ஒன்றாகும். நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயங்களும் அதில் உள்ளன. எனவே, ’13’ ஐ ஒருபோதும் முழுமையாக அமுல்படுத்த முடியாது என உத்தர லங்கா சபாகய அரசியல் கூட்டணியின் பிரதி செயலாளரும், யுதுகம அமைப்பின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க தெரிவித்தார் .

கொழும்பில் இடம்பெற்ற ஊடகச்சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

“அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் இலங்கைக்கு பலவந்தமாக திணிக்கப்பட்டதொன்றாகும். ஜே.ஆர் ஜயவர்தனவை அடிபணிய வைத்தே இச்சட்டம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது.

அவ்வாறு நிறைவேற்றிய சட்டத்தை ஜே.ஆர். ஜயவர்தன முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. ரணசிங்க பிரேமதாசவும் ’13’ ஐ ஆதரவிக்கவில்லை.

அதிகாரப் பகிர்வை பற்றி பேசி ஆட்சிக்கு வந்த சந்திரிக்காவும் ’13’ ஐ முழுமையாக அமுலாக்கவில்லை.

இந்த மண்ணில் ’13’ ஐ முழுமையாக அமுல்படுத்த முடியாது. ஏனெனில் நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயங்களே அதில் உள்ளன.

2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட நாட்டுக்கு புதிய அரசமைப்பு அவசியம்.

அதற்காகவே கோட்டாபய ராஜபக்சவுக்கு நாட்டு மக்கள் வாக்களித்தனர். அரசமைப்பு மறுசீரமைப்புக்காகவே பாராளுமன்ற தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவு வழங்கப்பட்டது. மக்களின் இந்த ஆணைக்கு புறம்பாக செயற்பட முடியாது.” எனத் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )