
நாடு முழுவதும் தொடர் போராட்டங்களுக்குத் திட்டம்
நாடு முழுவதும் இந்த மாத நடுப்பகுதியில் இருந்து தொடர் போராட்டங்களை நடத்த சில கட்சிகள் மற்றும் அமைப்புகள் செயல்பட்டு வருவதாக புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
மின்சாரக் கட்டண உயர்வு, எரிபொருள் மற்றும் எரிவாயு விலை அதிகரிப்பு, அடுத்த வருடம் முதல் வற் வரி அதிகரிப்பு, அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு, சுகாதாரப் பாதுகாப்பில் குறைபாடுகள், கற்பிப்பதில் சிக்கல்கள், அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு போன்ற பல விடயங்களை முன்வைத்து இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக முழுமையான அறிக்கை அரசுக்கு கையளிக்கப்படும் என புலனாய்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை நாடு முழுவதும் தற்போது மின்சாரம், சுகாதாரம், பல்கலைக்கழகம், வங்கித்துறை, அரச ஊழியர்கள் போன்றவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள வற் வரி அதிகரிப்பின் பின்னர், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை மேலும் மூன்று வீதத்தால் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது கடும் பொருளாதார சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ள மக்கள் மேலும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் மக்கள் தொடர்ச்சியாக வீதிக்கிறங்கி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு என்பவற்றின் காரணமாக காலி முகத்திடல் போராட்டம் இடம்பெற்று ஆட்சி மாற்றாத்துக்கு வழி வகுத்தது. அதன் பின்னர் இடம்பெறும் போராட்டங்கள் தொடர்ச்சியாக பொலிஸாரால் நசுக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

