
தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த இரு அரச அதிகாரிகளுக்கு வெளிநாட்டு பயணம் தடை
போலி ஆவணங்களை தயாரித்து தரமற்ற 22,500 இம்யூனோகுளோபின் (Immunoglobulin) தடுப்பூசி குப்பிகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதித்த இரண்டு உயர் அரச அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சமர்ப்பித்த பிரேரணையை அடுத்து மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இந்த வெளிநாட்டுப் பயணத்தடையை விதித்துள்ளது.
இதன்படி, மருத்துவ விநியோகப் பிரிவின் பணிப்பாளர் கபில விக்ரமநாயக்க, தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி விஜித் குணசேகர மற்றும் இலங்கைக்கு குறித்த மருந்துகளை இறக்குமதி செய்த நிறுவனத்தின் பணிப்பாளர் ஜானக பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த மருந்து நிறுவனம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, இங்கு 130 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
விசாரணைகள் நிறைவடையும் வரை குறித்த உத்தரவு அமுல்படுத்தப்படும் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Immunoglobulin
இம்யூனோகுளோபின் மருந்து தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள்
போலி ஆவணங்களை சமர்ப்பித்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட இம்யூனோகுளோபின் (Immunoglobulin) எனும் ஆன்டிபயோடிக் மருந்து தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பான அனைத்து விவரங்களும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் அவர்கள் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக இதுவரை அமைச்சுக்கு அறிவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டன.
இதேவேளை, இம்யூனோகுளோபின் (Immunoglobulin) மருந்து பரிவர்த்தனைக்கு பொறுப்பானவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பது அவசியம் என சுகாதார நிபுணர்கள் சங்கம் தமது கோரிக்கைகளை முன்வைத்திருந்தது.
இந்நிலையிலேயே தற்போது இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.