
தேர்தலை தடுப்பதற்கு கலவரத்திற்கு திட்டம்
நாட்டில் போராட்டங்கள் மற்றும் கலவர நிலைமைகளை ஏற்படுத்தி, அமைதியின்மையை உருவாக்கி தேர்தலை ஒத்தி வைக்கும் திட்டங்களை ஆட்சியாளர்கள் முன்னெடுக்கலாம் என்று தேசிய சுதந்திர முன்னணி தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
விமல் வீரவன்சவினால் எழுதப்பட்ட ‘மே 9இல் மறைந்துள்ள’ கதைகள் என்ற நூலின் ஆங்கில மற்றும் ரஷ்ய மொழிப்பெயர்ப்பு வெளியீடு கொழும்பில் அண்மையில் நடைபெற்ற போது, அதில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது வீரவன்ச மேலும் கூறுகையில்,
ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் மேற்குலக நாடுகள் ஜனாதிபதி பாராளுமன்ற தேர்தல்களை பிற்போடும் ஜனாதிபதியின் முயற்சிகளிற்கு ஆதரவளிக்கும் மேற்குலக நாடுகளின் ஒட்டுமொத்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாக இது காணப்படும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுக்கும் நடவடிக்கைகளை பார்த்தால் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என்று நினைக்க வேண்டாம். மாகாண சபைகள் தேர்தலை காணாமல் போகச் செய்த ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலையும் காணாமல் போகச் செய்ய முயற்சிக்கின்றார். அவரால் தேர்தலில் வெற்றிப்பெற முடியாது என்பதனால் இவ்வாறு செய்ய முயற்சிக்கின்றார்.
தற்போதைய நிலைமைகளை இன்னும் மோசமாக இடமளித்து ”ரணில் கோ ஹோம்”போராட்டம், பசியால் ஏற்படும் கலவரம், புட்சிட்டிகளுக்குள் புகுந்து பொருட்களை கொள்ளையிடும் கலவரம், கொள்ளை, திருட்டு என நாட்டை பிரச்சினைகளுக்குள் கொண்டு செல்ல இடமளிக்க முடியும். பின்னர் அதனை பயன்படுத்தி இவ்வாறான நிலைமையில் தேர்தலை நடத்த முடியாது என்று கூறலாம். அரசியலமைப்பு ரீதியில் அவ்வாறு செய்ய முடியாவிட்டாலும் சபாநாயரகர் ஊடாக யோசனையை கொண்டு வரலாம். இவ்வாறாக ஜனநாயகம் மீதான நம்பிக்கையை அவ்வாறே இல்லாது செய்ய முயற்சிக்கலாம்.
அடுத்ததாக பாராளுமன்ற தேர்தலுக்கும் அவ்வாறே நடக்கும். தேர்தல் முறை மறுசீரமைப்பு என்ற யோசனை அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்தத் தேர்தலையும் காணாமல் போகச் செய்யும் முயற்சிகள் இடம்பெறுகின்றன. அதேபோன்று நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கினால் ஜனாதிபதித் தேர்தலும் இல்லையே. இவை அனைத்தையும் அவர்கள் தங்களின் எதிர்கால பயணத்திற்காகவே செய்ய முயற்சிக்கின்றனர்.