
சிங்கள வாக்குகள் மட்டுமா ஜனாதிபதி ரணிலின் இலக்கு
தனது தேர்தல் வெற்றிக்கு சிங்கள மக்களின் வாக்குகளை மட்டும் பெறும் நோக்கில் ஜனாதிபதி செயற்படுகிறார் என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான சகல பேச்சுவார்த்தைகளையும் இந்த ஜனாதிபதியே முன்னெடுத்தார் என்பதை எவரும் மறந்து விடக்கூடாது என வெளிவிவகாரத்துறை இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மூளைசாலிகள் வெளியேற்றம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
ஜெர்மன் நாட்டு ஊடகத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய நேர்காணலை அடிப்படையாக கொண்டு ஒரு தரப்பினர் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்கிறார்கள்.ஜனாதிபதி வழங்கிய நேர்காணலின் போது நாட்டின் பிரச்சினைகளை முன்வைத்து எழுப்பட்ட கேள்விகளுக்கு அரச தலைவர் என்ற ரீதியிலேயே அவர் பதிலளித்துள்ளார்.
தனது தேர்தல் வெற்றிக்காக சிங்கள மக்களின் வாக்குகளை மட்டும் பெறுவதை நோக்காக கொண்டு ஜனாதிபதி செயற்படுகிறார் என்ற குற்றச்சத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான சகல பேச்சுவார்த்தைகளையும் இந்த ஜனாதிபதியே மேற்கொண்டார் என்பதை எவரும் மறந்து விடக்கூடாது.
பொருளாதாரப் பாதிப்புக்கு தீர்வு காணும் குறுகிய கால திட்டமாகவே வரி விதிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது.வெகுவிரைவில் வரி கொள்கை மறுசீரமைக்கப்படும் என்றார்.