
தவறுகளில் இருந்து தப்பிக்கவே நீதிபதி நாட்டிலிருந்து தப்பியோட்டம்
முல்லைதீவு நீதிபதிக்கு எதிராக விசாரணைகள் நடைபெற்றுவந்த நிலையிலேயே அவர் நாட்டை விட்டு சென்றுள்ளதாகவும் இதனால் அவர் அச்சுறுத்தலால் நாட்டை விட்டு சென்றாரா? அல்லது தான் செய்த தவறுகளில் இருக்க தப்பிப்பதற்காக நாட்டை விட்டு தப்பிச் சென்றாரா? என்பது தொடர்பில் ஆராய வேண்டும் என்று அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
முல்லைதீவு நீதிபதிக்கு பின்னால் நாட்டை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் சூழ்ச்சிகள் இருந்திருக்கலாம் என்றும், இதனுடன் எதிர்க்கட்சிக்கும் தொடர்பு உள்ளதா? என்று சந்தேகங்கள் எழுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குடியியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் ஆகியன மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். அத்துடன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் சீஐடி ஊடாக தனியான விசாரணையை முன்னெடுக்கின்றார். இவ்வாறான பொறுப்புள்ள பதவியை வகிக்கும் நீதிபதி தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தால் குறைந்தது முறைப்பாட்டையாவது செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் எங்கேயும் முறையிடவில்லை. நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கும் அறிவிக்கவில்லை. இதனால் இதில் பெரும் சூழ்ச்சி இருப்பதாக தெரிகின்றது.
அதேபோன்று அவர் வெளிநாடு செல்ல முன்னர் மேற்குலக நாடுகளின் தூதரகங்களில் தூதுவர்கள் இருவரை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. அதேபோன்று அவரால் வழங்கப்பட்ட வழக்கு தீர்ப்புகள் குறித்து அவருக்கு எதிராக தனியான விசாரணைகள் நடப்பதாக நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுக்குள் கதைக்கப்படுவதாகவும் அறிகின்றோம்.
அதேபோன்று அவருக்கு எதிராக அவரின் மனைவியால் முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் கதைக்கப்படுகின்றது. இதனால் அவர் நாட்டை விட்டு சென்றது தனக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் காரணத்தினாலா அல்லது தான் செய்த தவறுகளில் இருந்து தப்பிக்க நாட்டை விட்டு தப்பிச் சென்றாரா என்பது தொடர்பில் ஆராய வேண்டும்.
தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தால் அது தொடர்பில் அவர் பிடியாணையை பிறப்பித்தாவது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. இதனால் இதன் பின்னால் சூழ்ச்சி இருந்துள்ளதா? அந்த சூழ்ச்சியில் எதிர்க்கட்சியும் தொடர்புபட்டுள்ளதா? அவருக்காக முன்னிற்கும் குழுக்களும் இந்த பாராளுமன்றத்தில் உள்ளது. இது தொடர்பில் சந்தேகங்கள் உள்ளன. நாட்டை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் சூழ்ச்சி இருந்ததா? என்ற சந்தேகமும் உள்ளது என்றார்.