முல்லைத்தீவு நீதிபதி விவகாரம்; மனித சங்கிலி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள தமிழ் தேசிய கட்சிகள்

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம்; மனித சங்கிலி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள தமிழ் தேசிய கட்சிகள்

முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மனித சங்கிலி போராட்டம் வெற்றி அளிப்பதற்கு தமிழ் மக்கள் தங்கள் பூரணமான ஆதரவை வழங்க வேண்டும் என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ந. ஶ்ரீகாந்தா தெரிவித்தார்.

உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதிவி விலகி வெளிநாட்டிற்கு சென்றுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியும் நீதவானுமான ரி.சரவணராஜா விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசிய கட்சிகள் அவசரமாக ஒன்றுகூடி கலந்துரையாடலில் ஈடுப்பட்டனர்.

இந்த கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ந. ஶ்ரீகாந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எங்களுடைய வரலாற்று வாழ்விடமாக அங்கீகரிக்கப்பட்டு இருக்கின்ற வடக்கு கிழக்கு உள்ளடக்கப்பட்ட தமிழ் மாநிலத்திலே தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தினால் மீறப்பட்டு வந்திருக்கிறது.

இந்த சூழ்நிலையிலே குருந்தூர் மலையில் உள்ள ஆலயம் தொடர்பான வழக்கு விசாரணையை மேற்கொண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியும் நீதவானுமான ரி.சரவணராஜா பல்வேறு அழுத்தங்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் ஆளான நிலையிலேயே தன்னுடைய பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்நிகழ்வு தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை எம்மால் கைக்கட்டி பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

எனவே இந்த அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது. இதில் ஏழு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து சில முக்கிய தீர்மானங்களை மேற்கொண்டுள்ளோம்.

அதன்படி, தமிழ் நீதிபதியின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு எமது கடுமையான கண்டனத்தையும், உணர்வுகளையும் உலக அரங்கிற்கு முன்னால் சமர்ப்பித்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பகிரங்க வேண்டுகோளை அடுத்து வரும் சில தினங்களில் முன்வைக்க தீர்மானித்துள்ளோம்.

இதேவேளை நமது மக்களின் காத்திரமான எதிர்ப்பினை வெளிப்படுத்தும் விதத்திலே எதிர்வரும் 4 ஆம் திகதி புதன்கிழமையன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் மருதனார்மடத்தில் ஆரம்பித்து யாழ்.நகர் வகையில் நீடிக்கும் வகையில் ஒர் தொடர் சங்கிலி போராட்டத்திற்கும் ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்த விடயத்திலே மனித உரிமை அமைப்புகள், மாணவர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகளிலே அக்கறை கொண்டு ஆர்வத்துடன் செயற்பட்டு வருகிற அமைப்புகள் மத ஸ்தாபனங்கள் உட்பட சமூகத்தின் அனைத்து பிரிவினரதும் ஆதரவை நாங்கள் கோரி நிற்கின்றோம்.

இந்த மனித சங்கிலி போராட்டம் வெற்றி அளிப்பதற்கு எமது மக்கள் தங்கள் பூரணமான ஆதரவினை வழங்குவார்கள் என நாங்கள் நம்பிக்கையோடு எதிர்பார்த்து இருக்கின்றோம் ” என தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )