
வடக்கில் யுத்தத்தின் இறுதி 5 மாதங்களில் 1,70,000 தமிழர்கள் படு கொலை
சர்வதேச மனித உரிமை உரிமை சட்டங்கள் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டமைக்கு இலங்கையை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் பொறுப்புக் கூறச் செய்யவேண்டும் என வலியுறுத்தும் கடிதமொன்றை அமெரிக்க காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனிபிளிங்கெனிற்கு அனுப்பிவைத்துள்ளனர்.
அமெரிக்க காங்கிரஸில் அங்கம் வகிக்கும் இரு கட்சிகளின் உறுப்பினர்களும் இந்த கடிதத்தை அனுப்பிவைத்துள்ளனர்.
இலங்கையில் சித்திரவதை உட்பட சர்வதேச குற்றங்கள் என கருதப்படக்கூடிய குற்றங்கள் உட்பட சர்வதேச சட்டம் சர்வதேச மனித உரிமை சட்டம் ஆகியவை மீறப்பட்டமை தொடர்பில் இலங்கையில் போதிய நீதியும் பொறுப்புக்கூறலும் இல்லாதமை குறித்து இந்த கடிதத்தை எழுவதாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதலை அனுபவிக்கின்றனர் இது அந்த நாடு எதிர்கொள்ளும் அரசியல் சமூக நெருக்கடிக்கு காரணம். இது மனித உரிமைகளை ஜனநாயக கொள்கைகளை பின்பற்றும் அமெரிக்காவின் கொள்கைகளிற்கு முரணானது இதனை நிறுத்தவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப்புலிகளுடனான மோதல்களின் போது ஆயுதமோதல்களின் போது இலங்கை அரசாங்கமும் இராணுவத்தினரும் சர்வதேச குற்றங்களை இழைத்ததாக நம்பகதன்மைமிக்க குற்றச்சாட்டுகள் உள்ளன என தெரிவித்துள்ள காங்கிரஸ் உறுப்பினர்கள், 2009 ஜனவரி முதல் மேமாதம் வரையிலான நடவடிக்கைகள், குறிப்பாக கரிசனைக்குரியவையாக உள்ளன. இக்காலப்பகுதியில் இலங்கைஇராணுவத்தினர் வேண்டுமென்றே பொதுமக்கள் மீதும் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மருத்துவமனைகள் போன்ற பொதுமக்கள் இலக்குகள் மீதும் தாக்குதலை மேற்கொண்டனர். மேலும் அவர்கள் தமிழ் பெண்களை பாலியல் வன்முறைக்குள்ளாக்கி சித்திரவதை செய்து சிதைத்துக் கொலை செய்தனர் எனவும் காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
வெள்ளைகொடியுடன் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களை சுட்டுக்கொன்றனர். விடுதலைப்புலி உறுப்பினர்களையும் பொதுமக்களையும் பலவந்தமாக காணாமல்போகச் செய்தனர். அவர்களிற்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் உள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட ஐந்து மாதங்களில் என்ன நடந்தது என்பது தெரியாத அல்லது கொல்லப்பட்டனர் என கருதப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை 40,000 முதல் 1,69,796 ஆகும் எனவும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
குற்றச்சாட்டுகளை சுயாதீனமாக விசாரணை செய்து வழக்கு தொடுப்பதற்கு பதில் இலங்கை அரசாங்கம் பல யுத்தகுற்றவாளிகளிற்கு அரசியல் இராணுவ தலைமையக பதவிகளை வழங்கியுள்ளது சிலர் அந்த பதவிகளில் தொடர்ந்தும் நீடிக்கின்றனர் -இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தமிழ்மக்களிற்கு எதிராக சித்திரவதை பாலியல் வன்முறை பலவந்தமாக காணாமல்போகச் செய்தல் போன்ற சித்திரவதைகளில் ஈடுபடுகின்றது என அவர்கள் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
மேலும் வடக்குகிழக்கில் தொடர்ச்சியான இராணுவமயமாக்கல் இடம்பெறுகின்றது. இலங்கை அரசாங்கம் காணி அபகரிப்புகளை தீவிரப்படுத்தியுள்ளது. நினைவு கூருவதற்கான உரிமையை ஒடுக்கிவருகின்றது எனவும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் நீண்டகால சித்திரவதை மற்றும் மனித உரிமைமீறல்கள் போன்ற வரலாற்றை கருத்தில் கொள்ளும்போது முழுமையாக தண்டனையின் பிடியிலிருந்து விலக்களித்தலுடன் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களிற்கு எதிராக பயங்கரமான குற்றங்களை இழைப்பது துரதிஷ்டவசமாக ஆச்சரியமளிக்கவில்லை எனவும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்மர் லீ, பில்ஜோன்சன், டனி கே டேவிஸ் ,ஜேம்ஸ் பி மக்கவர்ன், ஜேமி ரஸ்கின் ,இல்ஹான் ஓமர், கொரி புஸ், டேபோரா கே ரொஸ் ஆகியோரே இந்த கடிதத்தை எழுதியுள்ளனர்

