நல்லாட்சி அரசு குண்டுத் தாக்குதலை தடுக்கவில்லை

நல்லாட்சி அரசு குண்டுத் தாக்குதலை தடுக்கவில்லை

நல்லாட்சி அரசில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் போசிக்கப்பட்டார்கள்.முஸ்லிம் அரசியல்வாதிகள் அதற்கு ஆதரவு வழங்கினார்கள். சஹ்ரானின் தம்பியான ரிழ்வான் வைத்தியசாலையில் இருந்த போது அவரை சென்று பார்த்து நலன் விசாரித்தவர்களும் இந்தப் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல் நடக்கப்போவதாக முன் கூட்டியே தகவல்கள் கிடைத்த போதும் முஸ்லிம்களின் வாக்குகளை இழக்கக் கூடாது என்பதற்காகவே நல்லாட்சி அரசு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை தடுக்கவில்லை என தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவரும் பொது மக்கள் பாதுகாப்பு முன்னாள் அமைச்சரும் எம்.பி. யுமான ரியல் அட்மிரல் சரத்வீரசேகர குற்றம்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு குற்றம்சாட்டிய அவர் மேலும் பேசுகையில்,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இடம்பெறுவதற்கு முன் 2019.04.20 ஆம் திகதி பயங்கரவாதி சஹ்ரான் உறுதிப் பிரமாணம் செய்து அதனை 28 நிமிட காணொளியில் பதிவு செய்துள்ளார். நியூசிலாந்து பள்ளியில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களின் மரணத்துக்கு பழி தீர்ப்பதற்காக கத்தோலிக்க தேவாலயங்களில் குண்டுத்தாக்குதலை மேற்கொள்வதாக தமது உறுதிமொழியில் குறிப்பிட்டுள்ளார்கள்.சஹ்ரான் உட்பட அடிப்படைவாதிகள் தமது உறுதிமொழியில் எவ்விடத்திலும் கோத்தபாய ராஜபக்ஸவை ஆட்சிக்கு கொண்டு வர தாம் தமது உயிரை தியாகம் செய்வதாக குறிப்பிடவில்லை.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் தற்போது எதிர்தரப்பினர் சர்வதேச விசாரணைகளை கோருகிறார்கள்.உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலால் 5 அமெரிக்க பிரஜைகள் உயிரிழந்துள்ளார்கள்.ஆகவே அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர் 33 அமெரிக்க நிபுணர்கள் நாட்டுக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டனர் .பயங்கரவாதி சஹ்ரான் உட்பட தற்கொலை குண்டுதாரிகள் பயன்படுத்திய லெப்டொப்,தொலைபேசி உட்பட முக்கிய ஆவணங்களை முழுமையாக பரிசீலனை செய்தார்கள்.அதனை தொடர்ந்து ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு இந்த தாக்குதலை மேற்கொண்டதாக குறிப்பிட்டார்கள்.கோத்தபாய ராஜபக்ஸவை ஆட்சிக்கு கொண்டு வர குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதாக அமெரிக்க நிபுணர்களும் கூறவில்லை.

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ ,உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மீண்டும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு 2020.04.07 ஆம் திகதி அமெரிக்காவின் எப்.பி.ஐ. யிடம் வலியுறுத்திய போது,முழுமையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம்.தொடர்ந்து விசாரணைகளை மேற்கொள்வது அவசியமற்றது என எப்.பி.ஐ.பதிலளித்தது.

சஹ்ரான் தொடர்பில் புலனாய்வு பிரிவு நல்லாட்சி அரசாங்கத்துக்கு 200 அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு காலப் பகுதியில் புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக பதவி வகித்த நிலந்த ஜயவர்தன சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சிடம் ‘ சஹ்ரான் என்பவர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொள்கைகளை பிரசாரப்படுத்தி,முஸ்லிம் இளைஞர்களை அடிப்படைவாத கொள்கைக்குள் ஈர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்.கிழக்கு மாகாணத்தில் அடிப்படைவாத செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்.அவரை கைது செய்ய உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியிருந்தார். .2019.04.21 ஆம் திகதி குண்டுத்தாக்குதல் இடம்பெறும் வரை சஹ்ரான் கைது செய்யப்படவில்லை என்றார்.

இதன்போது எழுந்த ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான நளின் பண்டார, நௌபர் மௌலானா பிரதான சூத்திரதாரி என்று நீங்கள் ஆரம்பத்தில் குறிப்பிட்டீர்கள்.அவ்வாறானால் நௌபர் மௌலானாவை சி.ஐ.டி.விசாரணை செய்யவில்லையா? எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சரத் வீரசேகர எம்.பி, நௌபர் மௌலானாவை சி.ஐ.டி.யினர் விசாரணை செய்தார்கள் ஆனால் அந்த அறிக்கையை சி.ஐ.டி.யினர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கவில்லை என்று கூறியதுடன், 2019.02.18 ஆம் திகதி புலனாய்வு பிரிவினர் சஹ்ரானை கைது செய்ய கெகுனுகொல்ல பகுதிக்கு சென்றுள்ளார்கள்.அப்போது சஹ்ரான் தொடர்பான விசாரணைகளை நாங்கள் மேற்கொள்கிறோம் அவரை கைது செய்ய வேண்டாம் என சி.ஐ.டி.யினர் கூறியுள்ளனர். இவ்விடயம் தொடர்பான முழு விபரம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சமர்ப்பித்த அறிக்கையில் 145 ஆவது பக்கத்தில் உள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் போசிக்கப்பட்டார்கள்.முஸ்லிம் அரசியல்வாதிகள் அதற்கு ஆதரவு வழங்கினார்கள். சஹ்ரானின் தம்பியான ரிழ்வான் வைத்தியசாலையில் இருந்த போது அவரை சென்று பார்த்து நலன் விசாரித்தவர்களும் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள்.உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல் நடக்கப்போவதாக முன் கூட்டியே தகவல்கள் கிடைத்த போதும் முஸ்லிம்களின் வாக்குகளை இழக்கக் கூடாது என்பதற்காகவே நல்லாட்சி அரசு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை தடுக்கவில்லை.

.உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்துவது பயனற்றது,எனெனில் ஏற்கனவே இரண்டு சர்வதேச மட்டத்திலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )